வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:11:35 (04/12/2017)

'ஹெல்மெட் ஏன் போடல' அபராதம் விதித்து கார் ஓட்டுநரை அதிரவைத்த திருச்சி போலீஸ்

கார் ஓட்டியவருக்கு “ஹெல்மெட் போடவில்லை” என திருச்சி போலீஸார் அபராதம் விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் டாடா ஏஸ் வண்டியை ஓட்டிச் சென்ற கருணாகரன் என்பவருக்கு, அவர் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி 100 ரூபாய் அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், திருச்சியில் இதேபோல் மீண்டும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகம் முழுவதும் வாகனச் சோதனைகள் நடத்தி வழக்குகள் போடச் சொல்லி உயரதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக திருச்சியில் கடந்த நான்கு மாதங்களாகவே வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். அடுத்து, “ரெட் அலர்ட்” எனும் முறையில் ஒரே நேரத்தில் திருச்சி முழுவதும் சோதனை நடத்தினர்.

இதுநாள் வரை ஓரளவு பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் சோதனை நடந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக திருச்சி போலீஸார், கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடிகள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். திருச்சி மாநகர் முழுவதும் ஆங்காங்கே கும்பல் கும்பலாக நின்று வாகனங்களை மறித்து சோதனை நடத்தும் அவர்கள் கண் மூடித்தனமாக அபராதம் வசூலித்து வருகின்றனர். இதில் கொட்டும் மழையில் செல்லும் வாகனங்களைக்கூட விடுவதில்லை என்பதுதான் கொடுமை. 
 
நிலைமை இப்படியிருக்க, திருச்சி கல்லணை அருகேயுள்ள சர்க்கார் பாளையம் வேங்கூர் பூசைத்துறை எனும் இடத்தில், கடந்த 2-ம் தேதி திருவெறும்பூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த சகாய ஜெயராஜ் என்பவரின் காரை போலீஸார் நிறுத்தினர். அப்போது சகாய ஜெயராஜ், சீட் பெல்ட் அணிந்திருந்ததுடன், தன்னிடம் உள்ள ஆவணங்களைக் காட்டினார். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த போலீஸார், ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் போட்டதுடன், 100 ரூபாய் கட்டச் சொல்லிக் கேட்டனர்.

திருச்சி காவல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள், இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கூடவே அவர்களின் ஆவணங்கள் சரியாக இருக்கவேண்டும். இல்லையெனில் அபராதம் மற்றும் வழக்கு போடுங்கள் என நெருக்கடி கொடுப்பதால், போலீஸார் இப்படி நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் திருச்சிக்குள் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க