வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (04/12/2017)

கடைசி தொடர்பு:11:40 (04/12/2017)

'இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்'- அரசுக்கு எதிராக பொங்கிய டி.டி.வி.தினகரன்

குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ள இனியாவது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கை பற்றி தினகரன்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க டி.டி.வி.தினகரன் புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து தங்கியிருந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நெல்லையைச் சேர்ந்தவரான விஜிலா சத்யானந்த் சில தினங்களுக்கு முன்பு மாற்று முகாமுக்குச் சென்றுவிட்ட நிலையில் பிற நிர்வாகிகளிடம் அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார். 

புயலால் பாதிப்புக்குள்ளான குமரி மாவட்டத்துக்கு இன்று புறப்பட்டுச் செல்லும் முன்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ’’புயல், வெள்ளத்தால் குமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் குமரி மாவட்ட மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவில்லை என பொதுமக்கள் கருதுகிறார்கள். எனது கருத்தும் அதுதான்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு விரைவான முறையில் நிவாரணப் பணிகள் செய்யவில்லை. வழக்கம் போலவே தமிழக அரசு நிவாரணப் பணிகளில் சுணக்கம் காட்டிவருகிறது. இனிமேலாவது தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும். ஆடம்பர விழாக்கள் நடத்துவதில் அக்கறை காட்டும் தமிழக அரசு, மக்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். 

டி.டி.வி.தினகரன்

புயல் அறிவிப்பு தொடர்பாக வானிலை மையம் முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்கிற குறைபாடு காரணமாகவே ஆயிரக்கணக்கான மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மக்கள் கருதுகிறார்கள். இதுதொடர்பாக என்ன குறைபாடு ஏற்பட்டது என்பது பற்றி மத்திய அரசு பார்த்து அதைச் சரிசெய்ய வேண்டும்’’ என்றார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் குமரி மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.