வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:13:08 (04/12/2017)

``இன்னும் இரண்டு நாள்களில் பலத்த மழை பெய்யும்” : வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை

ஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. புயல், மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கேரளா நோக்கி நகர்ந்த ஒகி புயல், அங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய பின், தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்ந்துவருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் ஆந்திரா நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலையால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த மூன்று நாள்கள் வரையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என எச்சரித்துள்ளது.