வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (04/12/2017)

கடைசி தொடர்பு:11:59 (04/12/2017)

“நீல நிறத்திலிருந்து பிங்க் கலர்ல மாறின குழந்தையின் உடல்... அந்த திக் திக் நிமிடங்கள்!” - மீனா என்ற ஒரு தாயின் போராட்டம்

தாய்

மூளை முடக்குவாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை அதிஷ், 'வாழ்நாள் முழுக்க படுக்கையிலேயே கிடக்கவேண்டும்' என டாக்டர்களால் சொல்லப்பட்டவர். ஆனால், நடக்கிறார், சிரிக்கிறார், விளையாடுகிறார், தன் வேலைகளைத் தானே செய்துகொள்கிறார், அனைத்துக்கும் முத்தாய்ப்பாகப் பள்ளிக்குச் செல்கிறார். இந்த மாற்றத்துக்கான பின்னணியில் அதிஷின் தாய் மீனாவின் 19 ஆண்டுக்கால அன்புப் போராட்டம் இருக்கிறது. கலிஃபோர்னியாவில் வசிக்கும் அந்தத் தாய் வீடியோகால் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.  

தாய்

"நான் பிறந்து வளர்ந்தது சென்னை. எப்பவும் படிச்சுட்டே இருப்பேன். ப்ளஸ் டூ முடிச்சதும் நான் ஆசைப்பட்டபடி சென்னை ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் சீட் கிடைக்கலை. அதனால், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். செகண்ட் இயர் முடிச்சபோதே, பேங்க் எக்ஸாம் எழுதி மூணு பேங்கில் ஒரே நேரத்தில் செலக்ட் ஆனேன். புதுச்சேரியை அடுத்த மரக்காணம் 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா' வங்கியில் பணி. அப்போ, கரஸ்ல பி.காம்., படிச்சுட்டே தினமும் வேலை முடிஞ்சதும் சென்னைக்கு வந்து ஒரு டியூஷன் சென்டரில் டிகிரி பாடங்களைப் படிப்பேன். இப்படி மூணு வருஷ கோர்ஸை ஒரு வருஷத்திலேயே முடிச்சேன். கிளரிக்கலா ரெண்டு வருஷம் வொர்க் பண்ணிட்டு, புரொபேஷனரி ஆபீஸர் போஸ்டிங்குக்கு எக்ஸாம் எழுதினேன். ஒரே நேரத்தில் பத்து பேங்கில் செலக்ட் ஆனேன். தமிழகத்தின் பல 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா' கிளைகளில் வொர்க் பண்ணிகிட்டே, ஒரே வருஷத்தில் கரெஸ்ல எம்.காம்., முடிச்சேன். ஜெர்மன் லாங்குவேஜ் கோர்ஸ் முடிச்சுட்டு, ஜெர்மன் பேங்க் ஒண்ணுல வொர்க் பண்ண இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி செலக்டானேன்" என்கிற மீனா, 1995-ம் வருடம் அசிஸ்டென்ட் வைஸ் பிரெசிடென்டாக, ஜெர்மன் நாட்டு வங்கி ஒன்றில் பணியைத் தொடங்கியிருக்கிறார். 

அதிக வேலை நேரம், குளிர்காலப் பருவநிலை ஆகிய சூழல்களால் ஜெர்மனியில் வசித்த மீனாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடுமையான காய்ச்சலுடன் முதுகில் அக்கி ஏற்பட்டுள்ளது. 'ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்' என்ற பிரச்னையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டவர், தன் வங்கிப் பணியைத் தொடர்ந்திருக்கிறார். 

தாய்

"ட்ரீட்மென்ட் முடிஞ்சதும், என் தோல் பகுதி பிங்க் கலர்ல இருந்துச்சு. தினமும் ஒரு மணி நேரம் ஆயின்மென்ட் போட்டு உடம்பைத் துணியால் கவர் பண்ணிட்டு ஆபீஸ் போவேன். வேலைச் சுமை மற்றும் உடல் வலியால் ரொம்பவே தவிச்சாலும், அம்மா சாவித்ரி உதவியால் பிரச்னைகளைக் கடந்தேன். அந்தச் சமயம், என் ஃப்ரெண்ட்மூலம் ஜெர்மனில் ஐ.டி வேலையில் இருந்த சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சோமசுந்தரம் நண்பரானார். வேலை, வீடுன்னே இறுக்கமா இருந்த எனக்கு, சோமசுந்தரத்தின் நட்பு பெரிய ஆறுதல் கொடுக்க, ஒருகட்டத்துல இருவரும் கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்தோம். 1997-ம் வருஷம் இருவீட்டார் சம்மதத்துடன் சென்னையில் கல்யாணமாச்சு. கணவருக்கு அமெரிக்காவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கவே அங்கே குடியேறினோம்" என்கிற மீனாவுக்கு, வாழ்க்கை மீண்டும் மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கிறது.  

மீனாவின் முதல் பிரசவத்தின்போது பிறந்த குழந்தை அதிஷின் உடலில் எந்த அசைவுமில்லாமல், ஒரு பொம்மைபோல இருந்திருக்கிறான். சில நாள்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தையின் உடல் நீல நிறத்துக்கு மாறியபின், டாக்டர்கள் கைவிரிக்க, வேதனையின் உச்சத்துக்கே சென்றது குடும்பம். 

தாய்

"இனி அவ்ளோதான்னு நினைச்சபோது, குழந்தை அதிஷ் உடல், நீல நிறத்திலிருந்து பழையபடி பிங்க் நிறத்துக்கு மாறிச்சு. உடலில் அசைவுகள் வந்துச்சு. எல்லோருக்கும் அப்படியொரு சந்தோஷம். 'குழந்தைக்கு மூளை முடக்குவாதப் பிரச்னை மற்றும் வலிப்புப் பிரச்னை இருக்கு. படுக்கைதான் வாழ்க்கையா இருக்கும்'னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. பிரசவ சமயத்தில் கவனக்குறைவா சிசிச்சை கொடுத்ததே குழந்தையின் பிரச்னைக்குக் காரணம்னு கண்டுபிடிச்சேன். அந்த ஹாஸ்பிட்டல் மேல கேஸ் போட்டு, குழந்தையின் முக்கியமான ட்ரீட்மென்டுக்கு பணம் கிளெய்ம் பண்ணினேன். பல வெளிநாடுகளுக்கும் தூக்கிட்டுப்போய் பையனுக்கு இடைவிடாம தெரபிக் கொடுத்தேன். அவற்றின் பலனா இப்போ அதிஷால், நடக்க முடியுது. சொல்றதைப் புரிஞ்சுக்கிறான். தன் பணிகளை ஓரளவுக்கு செஞ்சுகிறான். 'படுக்கையே வாழ்க்கையா இருக்கும்'னு சொல்லப்பட்ட என் பையனை, ஸ்கூலுக்கு அனுப்பறேன். செகன்ட் கிளாஸ் படிக்கிறான்" என்கிற மீனாவின் முகத்தில் ஒரு பூரிப்பு. 

குழந்தைக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளைத் தெரிந்துகொண்டு வீட்டிலேயே தன் குழந்தைக்குக் கொடுக்கிறார். எம்.எஸ்.இன் ஸ்பெஷல் எஜூகேஷன் கோர்ஸூம், ஆட்டிசம் ஸ்பெஷலிஸ்ட் கோர்ஸூம் முடித்திருக்கிறார். 'ஜீனா' (Jeena) என்ற அமைப்பைத் தோழிகள் சிலருடன் சேர்ந்தும், அக்ஸெப்ட் (Accept) என்ற அமைப்பைத் தன் தோழி ஒருவருடன் இணைந்து தொடங்கி நடத்திவருகிறார். இந்த இரு அமைப்பு வழியே பல நூறு சிறப்புக் குழந்தைகளின் அம்மாக்களுக்குத் தனக்குத் தெரிந்த சிகிச்சை முறைகளையும் ஆலோசனைகளையும் இலவசமாக வழங்குகிறார் மீனா. 

தாய்

"அதிஷை நல்லபடியா கவனிச்சுக்கணும்னு நாங்க இன்னொரு குழந்தையைப் பெத்துக்கலை. இப்போ 19 வயசான அதிஷூக்கு ரெண்டு வயசுக் குழந்தையின் மூளை வளர்ச்சிதான். அவனைத் தனிமையில் விடக்கூடாது; சாப்பாடு ஊட்டிதான் விடணும்; இந்த நிலைக்குக் கொண்டுவர, நானும் கணவரும் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குழந்தையின் முகத்தில் புன்னகையைப் பார்க்கிறது மட்டுமே எங்க பிறவிப் பலனா வாழ்ந்துட்டிருக்கோம். இந்தப் போராட்ட வாழ்க்கையில், எனக்கும் கணவருக்கும் நிறையவே உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. அதையெல்லாம் தாண்டி பையனை இன்னும் நல்ல நிலைக்குக் கொண்டுவர உத்வேகத்தோடு இயங்கிட்டிருக்கிறோம். இதுக்கு என் அம்மா மற்றும் மாமியாரின் பங்களிப்பு மகத்தானது" என்றபடி, மகன் அதிஷை கட்டியணைத்து முத்தமிடுகிறார் மீனா.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத தாயன்பு!


டிரெண்டிங் @ விகடன்