வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:13:53 (05/12/2017)

ஆர்.கே.நகரிலிருந்து வந்த போன் அழைப்பு! விஷால் களத்தில் இறங்கியதன் பின்னணி

 நடிகர் விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கியதற்குப் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆர்.கே.நகர் வெள்ளத்தில் சிக்கியபோது தனிப்பட்ட முறையில் நடிகர் விஷால் செய்த உதவியைப் பார்த்து, அந்தத் தொகுதி மக்களில் சிலர் அவரைப் போட்டியிட போனில் வலியுறுத்தியதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 38-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கின்றனர். இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திடீரென ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு சில முக்கியக் காரணங்களைச் சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்
இதுகுறித்து அவர்கள் நம்மிடம் கூறுகையில், "நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஆகியவற்றில் நடிகர் விஷால் வெற்றி பெற்றார். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்துவருகிறது. சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நடிகர் விஷாலும், தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்தார். குறிப்பாக ஆர்.கே.நகர் மக்களுக்கு பலவகையில் உறுதுணையாக இருந்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் விஷாலைப் போட்டியிட தொகுதி மக்களிடமிருந்து பல போன் அழைப்புகள் அவருக்கு வந்தன. அதில் பேசியவர்கள், 'ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஆர்.கே.நகர் தொகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஓட்டுக்கேட்டு வரும் அரசியல்வாதிகள் வெற்றிபெற்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மழையின்போது வீடுகளில் தண்ணீர்தேங்கி நிற்கிறது. இந்தத் தொகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் இந்த முறை நீங்கள் நிற்க வேண்டும்' என்று கூறினர். அதன்பிறகே விஷால், தனக்கு நெருக்கமானவர்களிடம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்தார். அப்போது, அவர்களும் போட்டியிடலாம் என்று தெரிவித்தனர். 

விஷாலைப் பொறுத்தவரை, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு தேர்தலில் நிற்கிறார். அவர், அரசியல்வாதியல்ல. மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் உட்கட்சி பூசல்காரணமாக அ.தி.மு.க. ஓட்டுகள் சிதற வாய்ப்பு உள்ளன. மேலும், இதர கட்சிகள்மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இதனால், விஷாலுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது" என்றனர்.

 நடிகர் விஷால் 

 வேட்புமனுத் தாக்கல் செய்தவற்கு முன்பு, தி.நகரில் உள்ள காமராஜர் சிலை, ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை, சிவாஜி சிலை, அண்ணா நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம் ஆகிய இடங்களுக்கு நடிகர் விஷால் சென்றார். அங்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி பாகுபாடின்றி இருப்பதை வெளிப்படுத்தவே அனைத்து தலைவர்களுக்கும் நடிகர் விஷால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆர்.கே.நகரைப் பொறுத்தவரை விஷாலுக்கு, அவர் சார்ந்த சமுதாய ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், ஆர்.கே.நகரில் உள்ள மக்கள் பிரச்னையை மையப்படுத்தியே விஷால் பிரசாரம் செய்யவுள்ளார். கட்சிகள் மீதுள்ள மக்களின் வெறுப்பு, நடிகர், சமுதாய ஓட்டுகள் என்ற கூட்டல் கழித்தல் கணக்கு விஷாலுக்கு சாதகமாக அமையும் என்று சொல்கின்றனர் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்.

இதற்கிடையில், அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கவே விஷால் போட்டியிடுவதாகத் தகவல் வெளியானது. ஏனெனில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்குத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஓட்டு வங்கி உள்ளது. அதைவைத்தே அ.தி.மு.க.வில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது. அந்த ஓட்டுகளைப் பிரிக்கதான் விஷால் களமிறக்கப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர் அரசியல்நோக்கர்கள். ஏற்கெனவே தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் விஷாலின் போட்டி பரபரப்பை அதிகரித்துள்ளது. தற்போதையை சூழ்நிலையில் வேட்பாளர்கள் தினகரன், நடிகர் விஷால், தீபா, கூட்டணி கட்சிகளின் பலத்துடன் களமிறங்கும் தி.மு.க. ஆகியவற்றால் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. சவாலை சமாளித்து ஆர்.கே.நகரை மீண்டும் அ.தி.மு.க. தக்க வைத்துக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்