வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (04/12/2017)

கடைசி தொடர்பு:14:57 (04/12/2017)

'தொப்பி கிடைக்கலனா எந்த வகையில் பாதிப்பு ஏற்படும்?' - தினகரனுக்கு நீதிபதி கேள்வி 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தொப்பிச் சின்னம் கிடைக்கவில்லையென்றால் எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்று டி.டி.வி.தினகரன் தரப்புக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இந்தர்மீத் கவுர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அப்போது, தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் 300 போலி பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தினகரனுக்கு ஆதரவாக 7 லட்சம் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இறுதியல்ல. நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இடைத்தேர்தலில் போட்டியிடும் என் மனுதாரருக்கு தொப்பிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ரோஹத்கி, தொண்டர்கள் வாக்ளித்து, பெரும்பான்மையை முடிவு செய்வது கடினம். தொப்பிச் சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு சின்னம் கேட்கலாம். தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்போது டெல்லியில் மனுத்தாக்கல் ஏன். சின்னம் ஒதுக்கீடு செய்வதில் நீதிமன்றங்களுக்கு சட்டத்தில் இடமில்லை" என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஆர்.கே.நகரில் சுயேச்சையாகத்தான் தினகரன் போட்டியிடுகிறார். சின்னம் யாருக்க என்பதை பெரும்பான்மை மூலம் ஆணையம் முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்தர்மீத் கவுர், தேர்தல் ஆணையரே முடிவெடுக்க வேண்டும் என எதன் அடிப்படையில் ஆணையம் கூறுகிறது என்று கேள்வி எழுப்பினார். "நாங்கள் யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை" என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் கூறினார். "தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறிய நீதிபதி, ஆர்.கே.நகர் தேர்தலில் எத்தனை பேர் தொப்பிச் சின்னம் கேட்கிறார்கள். தொப்பிச் சின்னம் இல்லையென்றால் தினகரன் எந்த வகையில் பாதிக்கப்டுவார் எனக் கேள்வி எழுப்பினார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள், அணிகள் தொடர்பாகப் பல்வேறு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.