வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (04/12/2017)

கடைசி தொடர்பு:13:00 (04/12/2017)

எப்படித் தேர்வுசெய்யப்படுகிறார் காங்கிரஸ் தலைவர்..?

கில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார். 

ராகுல்காந்தி வேட்புமனுத்தாக்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவரின் பதவி 5 ஆண்டு காலம் கொண்டது. காங்கிரஸ் காரியக் கமிட்டிதான் தலைவர் தேர்தல்குறித்து முடிவு செய்யும் அதிகாரம்கொண்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள், தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவரை முன் மொழிய வேண்டும். பொதுத்தேர்தல்போலவே, போட்டியிடுபவர்கள் 7 நாள்களுக்குள் தங்கள் மனுவை வாபஸ் பெறலாம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், 50 சதவிகிதத்துக்கு மேல் யாரும் வாக்குகள் பெறவில்லையென்றால், இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தற்காலிகத் தலைவரை நியமிக்கவும் தேர்தலை நிறுத்திவைக்கும் அதிகாரமும் உள்ளது.

1998-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்துவருகிறார். காங்கிரஸ் கட்சி வரலாற்றில் அதிக காலம் தலைவராக இருந்ததும் இவர்தான். சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை 11 மணியளவில் டெல்லி காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியையும் சந்தித்தார். ராகுல் காந்தியை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றே தெரிகிறது. வரும் 11-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள். டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 19-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். ஒருவேளை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லையென்றால், உடனே முடிவு தெரிவிக்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க