வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (04/12/2017)

கடைசி தொடர்பு:14:00 (04/12/2017)

ஆர்.கே.நகர் தொகுதியில் குதிரையில் வந்து வேட்புமனுத் தாக்கல்செய்த கோவைக்காரர்! 

கோவையைச் சேர்ந்த நூர்முகமது என்பவர், குதிரையில் வந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு, ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிந்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின், ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்தது. டிசம்பர் 21-ம் தேதி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும், டி.டி.வி.தினகரன், நடிகர் விஷால் ஆகியோரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல்செய்ய இன்று கடைசி நாள் என்பதால் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு நடிகர் விஷால் மரியாதைசெலுத்தினார். நண்பகல் 12.30 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல்செய்ய உள்ளார். இதனிடையே, சுயேச்சையாகப் பல பேர் வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளனர். கோவை சுந்தரபுரம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஏ.நூர்முகமது என்பவர், இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு திடீரென குதிரையில் வந்தார். அவரை அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர். பின்னர், வேட்புமனுத் தாக்கல்செய்ய வந்திருப்பதாக நூர்முகமது கூறினார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தனது வேட்புமனுவை நூர்முகமது தாக்கல்செய்தார். அந்த மனுவில், ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிந்திருந்தனர்.  கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி வாக்காளரான நூர்முகமது, தனது வாக்காளர் எண் 64 என்றும் பாகம் 809 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.