வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:14:56 (04/12/2017)

அறுபது பேருக்கு சம்மன் அனுப்பிய நீதிபதி ஆறுமுகசாமி! - ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும்  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Jayalalitha

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்ற ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவருடைய மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சி பிரிந்தது. கூடவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்பதுபற்றித் தெரிந்துகொள்ள விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது.
ஆறுமுகசாமி விசாரணையைத் துவங்கி நடத்திவருகிறார். அதன்படி, சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுவருகிறது. இந்நிலையில், நேரில் ஆஜராகுமாறு 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாரிடம் எல்லாம் ஆறுமுகசாமி நேரடி விசாரணை நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.