வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:15:36 (04/12/2017)

திடீர் வெள்ளப்பெருக்கால் நடு ஆற்றில் 12 மணி நேரம் பரிதவித்த 3 கபடி வீரர்கள்!

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட கரைபுரண்ட வெள்ளத்தால், 3 கபடி வீரர்கள் நடு ஆற்றிலேயே 12 மணி நேரமாகப் பரிதவித்தனர். கோட்டாட்சியர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் அசராத முயற்சியால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் தரப்பிலிருந்து அதிகாரிகளுக்குப் பாராட்டுகள் குவிகிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, பல  மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்குகிறது. இதனால் பல ஆறு, குளங்கள் மற்றும் கண்மாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர், கும்பகோணம் ஆகிய ஊர்களை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில்,  திருப்புரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தான் கிராமத்தில் நடைபெறும் கபடிப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று மாலை 5 மணியளவில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து வந்துள்ளனர்.

அப்போது, திடீரென கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால், முன்னே சென்ற பிரித்விராஜன், சரவணன், தினேஷ் ஆகிய மூன்று இளைஞர்களும் அரியலூர் மாவட்ட எல்லை ஆற்றின் நடுவேயுள்ள மணல் திட்டில் மாட்டிக்கொண்டனர். அவர்கள் எவ்வளோ முயற்சிசெய்தும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆற்றைக் கடக்க முயற்சிசெய்தால் உயிரிழந்துவிடுவோம் என்ற அச்சத்தில், நடுத் திட்டில் செடியைப் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். 

பின்பு அவர்கள், போன்மூலம் நண்பர்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் களத்தில் இறங்கினர். இருமுறை முயன்றும் தோல்வியில் முடிந்ததால், உடையார்பாளையம் கோட்டாச்சியர் டினாகுமாரி தலைமையில், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி உத்தரவின்படி தூத்தூரிலிருந்து எந்திரப்படகு வரவழைக்கப்பட்டு, இரண்டு மணி நேரம் போராடி, அதிகாலை 5.30 மணியளவில் மூன்று இளைஞர்களையும் மீட்டனர். "நாங்கள் உயிரோடு இருப்போமா என்று நம்பிக்கை இல்லை. எங்களின் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றி" என்று காவல்துறையினரிடம் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்கள் இளைஞர்கள்.

அதேபோல, இவர்களுக்குப் பின் வந்த நான்கு பேர், தஞ்சை எல்லை ஆற்றில் சிக்கினர். அவர்களை கும்பகோணம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இந்த நிகழ்வு அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் பரபரப்பை உண்டாக்கியது.