நாகை மீன்வளப் பல்கலைக்கழகம் இடமாற்றமா? தமிமுன் அன்சாரி விளக்கம்

'நாகை மீன்வளப் பல்கலைக்கழகம் இடமாற்றம் செய்யப்படாது' என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

அன்சாரி


தமிமுன் அன்சாரி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ நாகப்பட்டினம் பனங்குடியில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகம், இம்மாவட்டத்துக்கு சிறப்பு சேர்க்கக்கூடியதாக இருக்கிறது. இப்பல்கலைக்கழகம் அமைய, முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பெரும் முயற்சி எடுத்தார்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்தன. கடந்த நவம்பர் 2-ம் தேதி, இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமிக்கு விரிவான கடிதம் எழுதினேன். இடமாற்றம் என்ற செய்தி உண்மையாக இருந்தால், அந்த முயற்சியைக் கைவிடுமாறு அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டேன். அதுபோல, கடந்த 29-ம் தேதி மீன்வளப் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கும் இதே போன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அமைச்சர் ஓ.எஸ்.மணியனைச் சந்தித்து இதுகுறித்து நான் கேட்டபோது, அப்படி ஒரு திட்டம் ஏதுமில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டார்.

எனவே, இதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், அப்படி ஒரு முயற்சி நடைபெறுமேயானால், அதை முறியடிக்க கடைசிவரை போராடுவேன் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!