வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (04/12/2017)

கடைசி தொடர்பு:17:05 (04/12/2017)

”இருக்கு... ஆனா இல்லை..!” - வராக நதியைக் காப்பாற்றுமா அரசு? #SaveVarahaRiver

தேனி மாவட்டத்தின் ஏழு நதிகளில் வராகநதியும் ஒன்று. ஒரு காலத்தில் வற்றாத ஆறாக விளங்கியது வராக நதி. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பெரியகுளம், வடுகபட்டி வழியாகச் சென்று வைகை ஆற்றில் தன்னை இணைத்துக்கொள்ளும். பெரியகுளம் நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வராகநதியில் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நதியின் கரைப்பகுதிகளான வடகரை, தென்கரை ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் நேரடியாக வராக நதியில் கலக்கப்படும். அதிலும் குறிப்பாக, வடகரை பகுதிகளிலே குடியிருப்புகள் அதிகம். அதனால் அப்பகுதியிலிருந்து அதிகமான அளவில் கழிவுநீர் வராகநதியில் கலந்து சுகாதாரக் கேட்டை விளைவித்து வந்தது.

30ஆண்டு கால போராட்டம் :

மக்கள் தொகைப் பெருக்கத்தால் பெரியகுளம் நகராட்சியில் உருவாகும் கழிவுநீரை வெளியேற்றுவது நாளுக்கு நாள் சவாலான விஷயமாகிப் போனது. நேரடியாக வராகநதியில் கலக்கும் கழிவுநீரைக் கண்டு சத்தமில்லாமல் இருந்தது பெரியகுளம் நகராட்சி. ஆனால், மக்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டங்கள் பல நடத்தினர். கடந்த 30ஆண்டுகளாக வராகநதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என நடத்தப்பட்டுவந்த போராட்டத்தின் முடிவாக, சுமார் 15கோடி ரூபாய் மதிப்பீட்டில் வராகநதியின் கரையில் தடுப்புச்சுவர் எழுப்பி சாக்கடை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன் வேலையும் தொடங்கப்பட்டது. அதிகமாகக் கழிவுநீர் கலக்கும் வடகரைப் பகுதியில் 1600மீட்டர் நீளத்திற்கு 21அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்படும். வேலை ஆரம்பிக்கப்பட்ட வேகத்தில் மழையும் வந்து வராகநதி வெள்ளமென மாறியது.

வராகநதி

சுவர் மட்டும் போதுமா? 

தற்போது 15கோடி ரூபாய் செலவு செய்து எழுப்பப்படும் சுவர் ஒரு கரைக்கு மட்டுமே, மற்றொரு கரைப் பகுதியிலிருந்து தற்போதும் கழிவுநீர் கலந்துகொண்டுதான் இருக்கிறது என்பதே கள நிலவரம். வெறும் சுவர் மட்டும் எழுப்பாமல், குடியிருப்புப் பகுதிகளில் முறையாக பாதாளச்சாக்கடை வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வராகநதியில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் தொற்றுநோய் அபாயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். இது ஒருபுறம் என்றால், வராகநதியில் பல ஆக்கிரமிப்புகளும், அனேக இடங்களில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனையும் நகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

வராக நதி

முழுவதும் மீட்கப்பட வேண்டும் வராகநதி :

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் வராகநதியானது, குள்ளப்புரத்தில் உள்ள பெரியகண்மாய், சில்வார்பட்டியில் உள்ள சிறுகுளம், சிந்துவம்பட்டி ஒட்டக்குளம், பொம்மிநாயக்கன்பட்டி புதுக்குளம், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம், பெரியகுளம் பெரியகண்மாய் உட்பட 20ற்கும் மேற்பட்ட குளங்களை நிரப்பிச்செல்லும். நேரடியாக, பத்தாயிரம் ஏக்கர் பாசனப் பரப்புக்குக் காரணாமனது. கடந்த இரண்டு ஆண்டாக போதிய மழை இல்லாததால் வராகநதியில் நீர்வரத்து இல்லை. இதனால் சாகுபடியும் சரிந்தது.

வராக நதி

இந்த முறை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால், கண்மாய்கள் நிறையவில்லை. வரத்துக்கால்வாய்களைப் பொதுப்பணித்துறை முறையாகப் பராமரிக்காதுதான் இதற்கு மிக முக்கியக் காரணம். இதனால் கண்மாய்களுக்குச் செல்லாமல் நேராக வைகை ஆற்றில் கலந்துவிடுகிறது வராகநதி. வெள்ளம் வந்த போதும் அதனால் பெரிய அளவில் பயன் இல்லாமல் போனது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வராகநதியிலிருந்து கண்மாய்களுக்குச் செல்லும் வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுப்பணித்துறை இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமா?