வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/12/2017)

கடைசி தொடர்பு:16:48 (12/07/2018)

கொள்ளையைத் தடுத்த விகடன் செய்தி... கோயில் நிர்வாகிகளுக்குக் கடிவாளம் போட்ட அதிகாரிகள்

'விகடன் செய்தியால், கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஐயப்பன் கோயிலில் நடந்துவந்த கொள்ளை தடுக்கப்பட்டிருக்கு. பக்தர்கள் விரும்புகிறபடி பூஜை பண்ண வழிவகை கிடைச்சுருக்கு. சாமியே சரணம் ஐயப்பா' என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அய்யப்ப பக்தர்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது கருப்பத்தூர். இந்தக் கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோயில், மிகவும் பிரசித்திப் பெற்றது. ஆனால், கோயிலை நிர்வகிக்கும் டிரஸ்ட்டைச் சேர்ந்த நிர்வாகிகள், பக்தர்கள் வழிபட வரும் வாசலை பாதியளவுக்குத் திடீரென சுவர் எழுப்பி அடைத்துவிட்டதாக பக்தர்கள் புலம்பினர். அதோடு, கோயில் விழாக்கள், கும்பாபிஷேகம் உள்ளிட்ட பெரிய நிகழ்ச்சிகளையே பொதுமக்களிடம் வசூல் செய்துதான் நடத்திவந்தார்களாம். அப்படி இருக்க, இருமுடி கட்டி வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க, பக்தர்கள் வரும் வழியை அடைத்து, சாமி கும்பிட இவ்வளவு, இருமுடி கட்ட இவ்வளவு என்று பணம் வசூலிப்பதாக பக்தர்கள் புலம்பிவந்தனர்.

அதோடு, தேதி இல்லாத ரசீதுகளைக் கொடுத்துப் பணம் பெற்று, அவ்வளவு தொகையையும் வாரிச் சுருட்டுவதாகக் குற்றச்சாட்டு கிளம்பியது. பக்தர்கள் வரிசையில் நின்று வருவதற்கு கோயில் முன்பு பந்தல் அமைத்து, நிழல் ஏற்படுத்துவதில்லை என்றும் பக்தர்கள் புகார் கூறினர். பக்தர்களின் இந்த குமுறல் பற்றி கடந்த மாதம் 27-ம் தேதி விகடன் இணையதளத்தில், 'வழியில் சுவர் எழுப்பி கொள்ளையடிக்கும் ஐயப்பன் கோயில் டிரஸ்ட்! - கொந்தளிக்கும் பக்தர்கள்' என்ற தலைப்பில் செய்தி பதிந்திருந்தோம். இந்நிலையில், அந்தச் செய்தி கரூர் மாவட்டத்தில் பரபரப்பாக, மாவட்ட நிர்வாக கவனத்திற்கும் சென்றது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், அறநிலையத்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டார்.

 நடந்தவற்றை நம் கவனத்திற்குக் கொண்டுவந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாகராஜன்,  "அதிகாரிகள் வந்து டிரஸ்டியிடம் பேசவும், 'நாங்க சரியாதான் செயல்படுறோம்'னு மல்லுக்கட்டினாங்க டிரஸ்ட்டைச் சேர்ந்தவங்க. உடனே கோபமான அதிகாரிகள், 'ஒழுங்கா சுவரை அகற்றலன்னா, கோயிலை அரசாங்கமே எடுத்துக்கும்'னு சொல்லவும், டிரஸ்ட்டைச் சேர்ந்தவங்க ஆடிப்போயிட்டாங்க. உடனே, பக்தர்களுக்கு தடையாக இருந்த சுவரை அகற்றிட்டாங்க. அதோடு, பக்தர்களுக்கு நிழல் ஏற்படுத்தும்விதமா கோயிலுக்கு முன்பு பந்தல் போட்டுட்டாங்க. ரசீதுகளில் இப்போது தேதி போட்டு கொடுக்குறாங்க. பக்தர்கள் விரும்பியபடி இப்போ கோயில்ல பூஜை பண்ண முடியுது. பக்தர்களை அல்லல்படுத்திய கோயில் டிரஸ்டியைச் சரிபண்ணி, பிரச்னைகள் தீர காரணமா இருந்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், விகடன் இணையதளத்துக்கும் பக்தர்கள் சார்பாக நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்" என்றார்.