வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:16:29 (12/07/2018)

'பிரச்னை முடியலன்னா மறுபடியும் மறியல் பண்ணுவோம்' - அதிகாரிகளை எச்சரித்த விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை டு மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் வாய்க்கால் சீர்படுத்தக்கோரி விவசாயிகள் மீண்டும் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு நிலவியது.

கரூர் மாவட்டம், குளித்தலை வைகநல்லுர் கிராமம், வதியம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர், வாழை என்று சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிகால் வாய்க்காலானது அருகில் உள்ள கோட்டமேடு வாய்க்காலில் வந்து சேரும்படி உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பே செல்வம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தைப் பிளாட் நிலமாக மாற்றினார்களாம். அந்தப் பிளாட்டின் கேட் அருகே வடிகால் வாய்க்காலை சிறிய குழாய்கள் மட்டுமே அமைத்து வாய்க்காலை மூடியுள்ளனர். தற்போது தொடர்மழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து அதிகளவு பாதிப்பைடைந்துள்ளது. மூன்று நாள்களாக நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கியும் வடிகால் மறைக்கப்பட்டு சிறிய குழாய் மட்டுமே உள்ளதால், தேங்கிய மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தாமதமாகத் தண்ணீர் வெளியேறுகிறது.

இதனால், கொதிப்படைந்த அப்பகுதி விவசாயிகள் திடீரென்று அந்த வடிகாலை மீட்டு, சரி செய்யும்படி சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வடிகாலைத் தனிநபர்கள் குறுகலாக அமைப்பதற்கு ஏற்கெனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். உடனடியாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு வடிகாலை சீர்படுத்தும்போது, அந்த பிளாட்டின் உரிமையாளர் தடுத்து நிறுத்தினார். 'நான் ஏற்கெனவே சொந்த செலவில் குழாய்கள் அமைத்துள்ளேன். அப்போது உள்ள அதிகாரிகளின் அனுமதியோடு செய்துள்ளேன்' என்று பிளாட் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, `உங்களுடைய நில அளவீட்டை எடுத்துப் பாருங்கள்' என்று அதிகாரிகளிடம் முறையிட, அதிகாரிகள் ஒன்றும் புரியாமல் நிலத்தை அளப்பதற்கு சர்வேயர் வர அழைப்பு விடுத்துள்னர். அவர் வர காலதாமதமாகும் என்பதால், மாலை வந்து நிலத்தை அளந்து வடிகாலை சீர் அமைக்கலாம் என்று அமைதியாகக் கலைந்து சென்றனர். 'பிரச்னை முடியலன்னா, மறுபடியும் சாலை மறியல் பண்ணுவோம்' என்றபடி விவசாயிகள் கலைந்து சென்றனர்.