`உங்கள் வீட்டுப் பெண்களின் படத்தை ஆபாசமாக வெளியிடுவேன்' - சென்னை வியாபாரியை மிரட்டிய கந்துவட்டிக் கும்பல் 

''உங்கள் வீட்டுக் குடும்பப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக வெளியிடுவேன்' என்று சென்னை வியாபாரியைக் கந்துவட்டிக் கும்பல் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னையைச் சேர்ந்தவர் புகாரி சர்புதின். இவர், சென்னை சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். 
அந்தப் புகாரில், ''நான், சென்னையில் புட்வேர் கடை நடத்திவருகிறேன். நேற்றிரவு என் கடைக்கு வந்த மூன்று பேர், என்னுடைய மாமா குறித்து விசாரித்தனர். அப்போது, என்னுடைய மாமாவுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன். உடனே அவர்கள் என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். அடுத்து, என்னுடைய குடும்பப் பெண்களின் படங்களை ஆபாச வீடியோவில் இணைத்து வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதோடு தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினர். எனவே, அவர்களிடம் விசாரித்து என் குடும்பப் பெண்களின் புகைப்படங்களை வாங்கித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, புகாரி சர்புதின் புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

புகார் தொடர்பாகப் புகாரி சர்புதின் கூறுகையில், "என்னை மிரட்டியவர்களில் ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்னுடைய கடைக்கு வந்தவர்களுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை. என்னுடைய மாமாவை விசாரித்தார்கள். அப்போதுதான் குடும்பப் பெண்களின் ஆபாசப் படங்கள் குறித்து தெரிவித்தனர். அவர்கள் சொல்வதுபோல புகைப்படங்கள் வெளியானால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதைவிட வேறுவழியில்லை'' என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "புகாரி சர்புதினின் மாமா, சீட்டு நடத்திவந்துள்ளார். அவரிடம் ஏமாந்தவர்களே இவரை  மிரட்டியுள்ளனர். புகாரி சர்புதினின் குடும்பப் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் அவர்களிடம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க உள்ளோம்" என்றனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!