மழைநீர் சேகரிப்பு, தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி உலகச் சாதனைப் படைத்த பெண்கள்!

உலக சாதனை நிகழ்த்திய பெண்கள்

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தியும் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் உலகச் சாதனை நிகழ்த்திய இளம் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்றனர்.

மண்டபம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் கலைவாணி. இவர் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி ஒரு லட்சம் வார்த்தைகளில் 'துளி' எனும் தலைப்பில் நீண்ட கவிதை எழுதியுள்ளார். மழை நீர் சேகரிப்பு குறித்து தமிழில் 11 ஆயிரத்து 111 வரிகளில் எழுதப்பட்ட இந்த நீளமான புதுக்கவிதை புதுச்சேரியில் உள்ள அசிஸ்ட் என்ற உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு கலைவாணிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இச்சாதனையைப் படைத்துள்ள கலைவாணி ஏற்கெனவே அதிக அளவிலான நெற்றிப் பொட்டுகளை  (ஸ்டிக்கர்  பொட்டு) சேகரித்தல் மற்றும் உருவாக்குதல் ஆகியவற்றுக்காகக் கின்னஸ், லிம்கா உள்ளிட்ட சாதனை அமைப்புகளின் சான்றிதழ் பெற்றிருக்கிறார். இதேபோல் பனைக்குளம்  பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் தஹ்மிதா பானு. இவர் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக ஒரே வழித் தடத்தில் பயணிக்ககூடிய ஆயிரம் பேருந்து பயணச் சீட்டுகளைச் சேகரித்து உலகச் சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு 1,750 ஒரே மாதிரியிலான நாணயங்களைக் கொண்டு 30 அடி அளவிலான 'அ' என்ற எழுத்தை உருவாக்கி உலகச் சாதனைப் படைத்த தஹ்மிதா பானுவின் இந்தப் பயணச் சீட்டு சேகரிப்பு உலக சாதனையைப் புதுச்சேரி அசிஸ்ட் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சாதனை படைத்த பட்டதாரிப் பெண்கள் கலைவாணி, தஹ்மிதா பானு ஆகிய இருவரும் தங்களது சாதனைக்கான சான்றுகளை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் அளித்து வாழ்த்துப் பெற்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!