வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (04/12/2017)

கடைசி தொடர்பு:18:54 (04/12/2017)

``அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது பொய்'' - கன்னியாகுமரி மீனவர்கள் மத்தியில் பொங்கிய மு.க.ஸ்டாலின்

ஒகி புயலால் கன்னியாகுமரி மக்களின் வாழ்வாதாரம் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், ரப்பர் மரங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. ஒகி புயலுக்கு முன்னதாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டுத் தரக்கோரி மீனவர்களின் உறவினர்கள் மூன்று தினங்களாகச் சாலைகளில் இறங்கிப் போராடிவருகின்றனர். இந்தநிலையில் கன்னியாகுமரிக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை இன்று சந்தித்துப் பேசியதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``29-ம் தேதியே புயல் முன்னெச்சரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது பொய். முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று மீனவர்கள் என்னிடம் கூறினர். புயல் பாதித்த கன்னியாகுமரி மீட்புப் பணிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது போதுமானதல்ல. ஒகி புயலால் கன்னியாகுமரி மக்களின் வாழ்வாதாரம் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவி தருவோம் என்ற வாக்குறுதியைத் தமிழக அரசு பின்பற்றவில்லை'' என்று குற்றம்சாட்டினார்.