வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (04/12/2017)

கடைசி தொடர்பு:16:27 (04/12/2017)

தினகரனுக்காக வாக்குச் சேகரிக்கும் தேனி மாவட்ட பன்னீர் ஆதரவாளர்கள்...! என்ன நடக்கிறது ஆர்.கே.நகரில்? #RKNagarAtrocities

தினகரன் ஓ.பன்னீர்செல்வம்

மிழக அதிமுக அரசியல் எப்படியோ அப்படி இல்லை, தேனி மாவட்ட அதிமுக அரசியல். தேனி மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று ஓர் அணியில் இருப்பவர் நாளை இன்னோர் அணிக்குத் தாவுவார். மறுநாள் இன்னோர் அணியில் அமைதியாக ஐக்கியமாவார். ‘இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா…’ போல இவர்களின் குரங்கு தாவலை ஒரு புறம் ஓ.பன்னீர்செல்வமும், மறுபுறம் தங்கத்தமிழ்ச்செல்வனும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அணி தாவலானது பெரிய அளவில் நடந்தது பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய காலம்தான். தேனி மாவட்டத்தில் இருந்த பெரும்பாலான கட்சி நிர்வாகிகள், தங்கத்தமிழ்ச்செல்வன் அணிக்குத் தாவினார்கள். அமைதியாக ஊருக்கு வரும் பன்னீர்செல்வம் அதே அமைதியோடு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் சென்றுவிடுவார். பிறகு, பன்னீர்செல்வமும், எடப்பாடியும் கை கோர்த்தார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணைமுதல்வர் எனப் பன்னீர்செல்வத்துக்கு பவர் கிடைக்க, அணி தாவிய நிர்வாகிகளுக்குக் கலக்கம் ஏற்பட்டது. சற்றும் யோசிக்காமல், தங்கத்தமிழ்ச்செல்வனை கை கழுவிவிட்டு பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்தார்கள். புன்னகையோடு ஏற்றுக்கொண்டார் பன்னீர்செல்வம். ‘மனிதர்களில் பல நிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லி பல்லைக்கடித்துக்கொண்டார் தங்கத்தமிழ்ச்செல்வன்.

வெறும் புன்னகை மட்டுமே :

அணி மாறிய நிர்வாகிகள் நூற்றாண்டு விழாவில் பரபரப்பாக வேலை செய்தார்கள். தர்மயுத்த காலத்தில் பன்னீர்செல்வத்தில் காரைக் கண்டாலே மறைந்துகொள்ளும் நிர்வாகிகள் அனைவரும் அவரது காரின் பின்னால் ஓடினார்கள். ஏதாவது ஒரு கட்சி நிகழ்ச்சி என்றால் விழுந்து விழுந்து வேலை செய்தார்கள். எல்லாவற்றையும் கண்ட பன்னீர்செல்வம் புன்னகையை மட்டுமே உதிர்த்துவிட்டு அமைதியானார். பன்னீர்செல்வம் துணைமுதல்வர் ஆனதும், ரோடு கான்ட்ராக்ட், மின் விளக்கு கான்ட்ராக்ட், அரசுக் கட்டிட கான்ட்ராக்ட் எனக் கட்சி நிர்வாகிகளின் கையில் இருந்த ஒட்டுமொத்த அரசு கான்ட்ராக்ட்களும் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான் அதிகாரத்தில் இருந்த பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அது பன்னீர்செல்வத்துக்கும் நன்றாக தெரியும்.

தினகரனுடன் பேசிய பன்னீர் ஆதரவு நிர்வாகிகள்? 

அணி மாறி பன்னீர்செல்வம் அருகிலேயே இருந்தாலும், இன்னும் தங்கத்தமிழ்ச்செல்வனுடன் தொடர்பில் நிர்வாகிகள் அனைவரும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும் அவர்கள், சமீபத்தில் தினகரனை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் கிடைத்தது. இதை உறுதிபடுத்த பன்னீர் செல்வத்தின் நெருங்கிய வட்டாரத்தில் முதலில் விசாரித்தோம், ``இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?. எல்லோரும் கட்சிப் பணியாற்றவா எங்கள் பக்கம் வந்தார்கள். எல்லாம் சுயநலத்துடன்தான் அணி மாறியிருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தல் பணிக்காக தேனியிலிருந்து அனைவரும் சென்னை வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கடந்த முறை தினகரன் ஆர்.கே. நகரில் பிரசாரம் செய்யும் போது அவருடன் இருந்தவர்கள். தொகுதி மக்களுக்கு அதிகப் பணம் கொடுத்த பரிச்சையமான முகத்தவர்கள். அவர்களை தொகுதி மக்களுக்குத் தெரியும் என்பதால், தினகரன் அவர்களை ரகசியமாக அழைத்துப் பேசியிருக்கிறார். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் ஏதாவது குழப்பம் விளைவித்து தேர்தல் நடக்கவிடாமல் செய்ய ஏதோ சதி செய்கிறார்கள் என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்`` என்றனர்.

தங்கத்தமிழ்ச்செல்வனின் நெருகிய வட்டாரத்தில் விசாரித்த போது, ``அதிகார ஆசைதான் எங்களைப் புறந்தள்ள காரணம். அதைப் பற்றி இன்றுவரை நாங்கள் கவலைபட்டதே இல்லை. ஆனால், இன்றும் எங்களுடன்தான் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்வது தவறான தகவல். எல்லோரும் சென்னையில்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வந்ததன் நோக்கம் ஆர்.கே நகர் தேர்தல் இல்லை, தனது சொந்த பந்தங்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வேலை, டாஸ்மார்க் கான்ட்ராக்ட் போன்றவற்றை கையோடு வாங்கிச் செல்ல மட்டும் தான். அவர்களைப் பற்றி யோசிக்கக் கூட நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்குத் தேர்தல் பணிகள் நிறைய இருக்கின்றன.`` என்றனர்.

அணி மாறியது மட்டுமல்லாமல் அதில் உள்குத்து அரசியலும் செய்யும் அக்கறை, மக்கள் பணியில் சிறிதேனும் காட்டியிருக்கலாம் என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது. கழக நிர்வாகிகளே கட்சிப்பணியினும் சிறந்தது மக்கள் பணி என்பதை இனியேனும் உணர்வீர்களா?