வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (04/12/2017)

கடைசி தொடர்பு:16:24 (04/12/2017)

டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன எதிர்பார்க்கலாம்? #PureRacecraft #TVSApacheRR310

டிவிஎஸ் அப்பாச்சி RR 310... சமீப காலத்தில் பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஸ்பை ஃபோட்டோக்களாலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய பைக் இதுவாகத்தான் இருக்கும்! அவர்களின் நீண்ட காத்திருப்புக்கான விடையாக,  டிசம்பர் 6-ம் தேதி அப்பாச்சி RR 310 பைக் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட Akula 310 எனும் கான்செப்ட் பைக்தான், தற்போது அப்பாச்சி RR 310 பைக்காக உருமாறியுள்ளது! இருதினங்களுக்கு முன்பு இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் 10 விநாடி டீசரில், இந்த பைக் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படி அப்பாச்சி RR 310 பைக்கில் என்ன இருக்கிறது?

டிசைன்

டிவிஎஸ் அப்பாச்சி

டுகாட்டி பைக்குகளை நினைவுபடுத்தும் சிவப்பு நிறம் மற்றும் ஷார்ப்பான பின்பகுதி, மாட்டின் கொம்புகளைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் Omega வடிவ LED டெயில் லைட், Race Spec ட்ரெல்லிஸ் ஃப்ரேம், தங்க நிறத்தில் இருக்கும் USD ஃபோர்க், வெள்ளை நிற ஸ்ப்ரிங்குடன் இருக்கும் மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ், Apache RR 310 எனப் பொறிக்கப்பட்டிருக்கும் ஃபுல் ஃபேரிங், பல்ஸர் RS 200 பைக்கில் இருப்பதுபோன்ற இரட்டை LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் LED இண்டிகேட்டர்கள் என அப்பாச்சி RR 310 பைக்கின் டீசரே அசரடிக்கிறது. இன்ஜின் க்ராங்க் கேஸில் TVS Racing என்ற பிராண்டிங் - பைக்கின் பின்பகுதியில் 35 Years of TVS Racing - அப்பாச்சி சீரிஸ் பைக்கின் டிரேட் மார்க் அம்சமான ரேஸிங் ஸ்ட்ரிப் என அப்பாச்சி RR 310 பைக்கில் குறைவான ஸ்டிக்கர்கள் இருப்பது ப்ளஸ். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஹெட்லைட் அருகே Bi-LED, முன்பக்க மட்கார்டில் ABS, சிவப்பு நிற ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் Race Spec, ஃபேரிங்கின் விண்ட் ஸ்க்ரீனில் இந்தியக் கொடி எனக் குட்டி குட்டி டீட்டெய்லிங்கும் அசத்தலாக இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கேடிஎம் RC200 பைக்கைக் கொஞ்சம் நினைவுபடுத்தினாலும், அதில் அதிக தகவல்கள் (Speed, RPM, Gear, Temperature, Clock, Range, Side Stand & Service Indicator) தெளிவாகத் தெரிகின்றன.

எர்கனாமிக்ஸ்

 

டிவிஎஸ் அப்பாச்சி

 

விண்ட் ஸ்க்ரீன் பார்க்கக் கொஞ்சம் பெரிதாகத் தெரிந்தாலும், அது நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, எதிர்க்காற்று ரைடரின் முகத்தில் அடிப்பதைக் குறைக்கும். மேலும், இரட்டை LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், இரவு நேரப் பயணங்களில் உதவிகரமாக இருக்கும். டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் ஃபுல் ஃபேரிங் பைக்கான இதில், இன்ஜினுக்கு லிக்விட் கூலிங் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜின் சூடு  ரைடரின் கால்களுக்கு அருகே வராது. அலாய் ஃபுட் ரெஸ்ட் பின்தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், பைக்கின் ஸ்ப்ளிட் ஹேண்டில்பாருடன் இது சேரும்போது, சீட்டிங் பொசிஷன் சற்றே ஸ்போர்ட்டியாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தவிர, பின்பக்க இருக்கையும் யமஹா R15 பைக்கைப் போல உயரமாக இருப்பதுபோலத் தெரிகிறது. மேலும், பின்னால் உட்காருபவர்க்கு கிராப் ரெயில் வழங்கப்படாதது நிச்சயம் மைனஸ்தான். ஆனால் ஸ்ப்ளிட் சீட்களின் குஷனிங், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றபடி இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.

இன்ஜின் - சேஸி - சஸ்பென்ஷன்

டிவிஎஸ் அப்பாச்சி

 

நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான பிஎம்டபிள்யூ G310R பைக்கை அடிப்படையாகக் கொண்டே, ஃபுல் ஃபேரிங் கொண்ட அப்பாச்சி RR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கைத் தயாரித்துள்ளது டிவிஎஸ். அந்த பைக்கில் இருக்கும் அதே ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் USD - மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்புதான் இங்கும் தொடர்கின்றன. ஆனால், பைக்கின் ஸ்போர்ட்டி பொசிஷனிங்கை மனதில்வைத்து, அதன் செட்-அப்பில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். அதற்கேற்ப 4 வால்வு, DOHC, லிக்விட் கூல்டு, 313 சிசி சிங்கிள் சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியிலும் சில மாற்றங்கள் இருக்கலாம். எனவே, பிஎம்டபிள்யூ G310R பைக், 34bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்திய நிலையில், அப்பாச்சி RR 310 எந்தளவு பெர்ஃபாமென்ஸைக் கொண்டிருக்கும் என்பது, பைக்கை ஓட்டிப் பார்க்கும்போது தெரியும். முன்பக்க - பின்பக்க Bybre ரேடியல் கேலிப்பர் பெட்டல் டிஸ்க் பிரேக்குகளுக்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம். அப்பாச்சி RTR 200 பைக்கில் Pirelli டயர்கள் ஆப்ஷனலாக வழங்கப்பட்ட நிலையில், அப்பாச்சி RR 310 பைக்கில் Michelin Pilot Street ரேடியல் டியுப்லெஸ் டயர்கள் (Front: 110/70 R17, Rear: 150/60 R17) பொருத்தப்பட்டுள்ளன.

விலை என்ன?

 

டிவிஎஸ் அப்பாச்சி

 

அப்பாச்சி சீரிஸ் பைக்குகளின் பலங்களில் ஒன்றான கையாளுமை, அப்பாச்சி RR 310 பைக்கிலும் நிச்சயமாகத் தொடரும். ஆனால், இந்த பைக்கை ஓட்டுதல் அனுபவத்துக்கும் முக்கியத்துவம் தரும் வகையில், ரேஸ் டிராக் - நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் பயன்படுத்தும் விதமாகவே டிவிஎஸ் வடிவமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபுல் பேரிங் - லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் & இண்டிகேட்டர் - USD ஃபோர்க் என இந்நிறுவனத்தின் வரலாற்றில் பல ''முதல்முறை'' வசதிகள் அப்பாச்சி RR 310 பைக்கில் இடம்பெற்றுள்ளன. தனது பவர்ஃபுல் மற்றும் பிரிமியம் பைக்கை, சுமார் 2 லட்சத்திற்குள்ளான விலையில் டிவிஎஸ் களமிறக்கினால், அது கேடிஎம் RC 390 - யமஹா YZF-R3 - கவாஸாகி நின்ஜா 300 - மஹிந்திரா மோஜோ - பஜாஜ் டொமினார் D400 போன்ற 300சிசி பைக்குகளுக்கு பெரும் தலைவலியைத் தரும் என்றே தோன்றுகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க