வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (04/12/2017)

கடைசி தொடர்பு:17:17 (04/12/2017)

”நல்லாப் படிக்கிற வரம்தான் என்னைமாதிரி புள்ளைங்களுக்குச் சாபம்” - அரியலூர் பத்மபிரியா

அரியலூர் பத்மபிரியா

நீட் தேர்வால் மருத்துவக் கனவு சிதைந்த அனிதாவின் மரணம் என்றென்றும் மாறாத, ஆறாத வலி. இப்போது, அதே மாவட்டத்தைச் சேர்ந்த பத்மபிரியா என்ற மாணவியின் மருத்துவக் கனவும் சிதைந்துக்கொண்டிருக்கிறது.

அரியலூர் மாவட்டம், கீழசிந்தாமணியைச் சேர்ந்த குணசேகரன். மாற்றுத்திறனாளியான அவரால் வேலைக்குப் போகமுடியாது என்பதால், தாய் காந்திமதி 100 நாள் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவர்களின் மகள்தான் பத்மபிரியா. நீட் தேர்வால் டாக்டர் கனவை இழந்தவர்களில் இவரும் ஒருவர். நான்கு தூறல் விழுந்தாலே ஒழுகும் குடிசை வீடு. அதை மறைப்பதற்காகக் கட்சிகளின் பிளக்ஸ் பேனர்களால் தடுப்புப் போட்டிருக்கிறார்கள். வீட்டில் உள்ள பீரோ முழுக்க பத்மபிரியா வாங்கிய விருதுகள், சான்றிதழ்களால் நிறைந்துள்ளது. 

பத்மபிரியா ''நீட் என்ற தேர்வு மட்டும் வரலைன்னா டாக்டர் படிப்புக்குச் சேர்ந்திருப்பேன். எங்கள் வீட்டில் என்னோடு சேர்த்து மூன்று பிள்ளைகள். ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும், படிப்புதான் நம்மை முன்னேற்றும்னு சொல்லி, படிக்கவெச்சாங்க. என் அப்பாவுக்குத் தமிழ் பற்று அதிகம். எனக்கும் நிரையச் சொல்லிக்கொடுப்பார். ஐந்து வயதிலேயே 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்திருக்கேன். சுமார் 600 மேடைகளில் திருக்குறள் மற்றும் தமிழ் மொழியின் சிறப்பைப் பேசியிருக்கேன். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியிருக்கேன். 2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த அகில இந்தியத் தமிழ்ச் சங்க மாநாடு, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநாடுகளில் சிறப்புரையாற்றி விருதுகளை வாங்கியிருக்கேன். 2015-ம் ஆண்டு, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் பேசியிருக்கேன். என் பேச்சைப் பாராட்டி, 'திருக்குறள் செல்வி' என்ற விருது வழங்கி பாராட்டினார். 2016-ம் ஆண்டு, குவைத்தில் நடந்த 'வள்ளுவம் வகுப்பல்ல வாழ்க்கை' என்ற போட்டியில் விருது வாங்கியிருக்கேன்'' என்று பத்மபிரியா சொல்லச் சொல்ல வியப்பின் உச்சிக்கே சென்றோம். 

''என் திறமையையும் குடும்பச் சூழ்நிலையையும் பார்த்த, தத்தனூர் மீனாட்சி ராமசாமி மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரகுநாதன் சார், அவருடைய ஸ்கூலில் சேர்த்து இலவசமா படிக்கவெச்சார். 12-ம் வகுப்புத் தேர்வில் 1114 மதிப்பெண் வாங்கினேன். கட் ஆப் மற்றும் கோட்டா அடிப்படையில் மருத்துவச் சீட் கிடைச்சுடும். நல்லா படிச்சு டாக்டராகணும். அப்பா, அம்மாவையும் என்னை நம்பி வர்றவங்களையும் நல்லா கவனிச்சுக்கணும்னு ஆசையோடு இருந்தேன். வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் என்னை டாக்டருன்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. எந்தக் கல்லூரில் இடம் கிடைக்கும்னு அடிக்கடி நெட்டிலும் பார்த்துட்டிருந்தேன். ஆனால், நீட் தேர்வு வந்து எல்லாத்தையும் கலைச்சுடுச்சு. அதில் 77 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிஞ்சது. மருத்துவக் கனவு தகர்ந்தாலும், தமிழ் மொழியின் மேல் இருக்கும் ஆர்வத்தால் சித்த மருத்துவம் படிக்க விண்ணப்பித்தேன். அதில், கோயமுத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் இடம் கிடைச்சது. ஆனால், ஐந்தரை வருடப் படிப்புக்கு 18 லட்சம் செலவாகும். ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது 18 லட்சத்துக்கு எங்கே போறது?. எனக்காக ரகுநாதன் சார் பலபேர்கிட்ட கேட்டு ஒருவருஷ பணத்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். ஆனா இன்னும் நாலு வருஷத்துக்கு நான் எங்க போறது?

பணத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லாத ஒரு காலம் வராதா சார்?. என்னை மாதிரி புள்ளைங்க நல்லா படிச்சா அது சாபம் சார்.