ஜெயலலிதா நினைவுதினத்தை டிச.5-ல் அனுசரிக்கத் தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கத் தடைகோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ல் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது முதலாமாண்டு நினைவுதினம் நாளை (டிசம்பர் 5) அனுசரிக்கப்பட இருக்கிறது. இந்தநிலையில், ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்கத் தடை கோரி வழக்கறிஞர் குமாரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது கட்சியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். எனவே, ஜெயலலிதா இறப்பு குறித்த சந்தேகம் தீர்க்கப்படும்வரை அவரது நினைவுதினத்தை டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிறப்பு, இறப்பு குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய இயலாது. இறப்பு சான்றிதழ் அடிப்படையில் நினைவுதினம் அனுசரிப்பதில் தவறேதுமில்லை என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!