8 மணிக்கு கோபாலபுரத்துக்குத் தகவல் கொடுத்தேன்; 12 மணிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது! அரசை வசைபாடும் முன்னாள் எம்.எல்.ஏ

தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் சுமார் 6 அடி வரை அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டமானது 130.30 அடியாக உள்ளது. இந்நிலையில் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி, போடித் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன் கலெக்டரைச் சந்தித்து மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், ``முல்லைப்பெரியாறு அணையில் 126 அடி தண்ணீர் வந்ததும் 18-ம் கால்வாயைத் திறக்க வேண்டும் என்று அரசாணையே உள்ளது. தற்போது அணையில் 130 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதாலும், அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதாலும் உடனே 18-ம் கால்வாயைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அணையில் 126 அடி தண்ணீர் வந்தவுடன் 18-ம் கால்வாய்க்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காலை 8 மணிக்கு கோபாலபுரத்துக்குத் தகவல் கொடுத்தேன். 12 மணிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

18-ம் கால்வாயை நம்பி, கம்பம், போடி பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. அதைக் கருத்தில்கொண்டு அன்று செயல்பட்டது திமுக அரசு. ஆனால், இன்றைய அரசு விவசாயிகள் மீதும் மக்கள் மீதும் எந்தவித அக்கறையும் இல்லாத அரசாகச் செயலற்று கிடக்கிறது`` என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!