வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:19:20 (04/12/2017)

தரைமட்டமான 14 வீடுகள்... தூக்கத்தைத் தொலைத்த மக்கள்... ஜெயங்கொண்டத்தில் தொடரும் சோகம்

ஜெயங்கொண்டத்தில் தொடர் மழையால் 7-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி மக்கள் குடியிருப்பில் புகுந்துள்ளதால் கடும் அவதிப்பட்டுள்ளனர். வீடுகள் இடிந்து பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருந்து என்ன பயன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பல  மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல ஆறு, குளங்கள் மற்றும் கண்மாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெயங்கொண்டத்தின் மையப்பகுதியில் உள்ளது உய்யக்கொண்டான் ஏரி. கடந்த 3 நாள்களாகப் பெய்த பலத்த கனமழையால் உய்யக்கொண்டான் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஏரிக்கு மற்ற பகுதியில் உள்ள மூன்று ஏரிகளிலிருந்தும் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இதனால் ஏரி முழுவதுமாக நீர் நிறைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் சிதம்பரம் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி, வீடுகள் மற்றும் கடைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. வீடுகளில் உள்ளேயும் கழிப்பறைகளும் வெள்ளத்தால் நிரம்பியது. கடைகளிலும் வீடுகளிலும் உள்ளே சென்ற வெள்ள நீரை அப்பகுதி மக்களே பாத்திரங்கள் கொண்டு வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

களத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், நகராட்சி ஆணையர் சங்கரன் ஆகியோர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சிதம்பரம் சாலையில் சென்ற வெள்ள நீர் ஆற்று வெள்ளம்போல் காட்சியளித்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ``நகராட்சி நிர்வாகம் மழைக்காலத்துக்கு முன்பு வடிகால்களைச் சீரமைக்காமல் தற்போது வெள்ளம் சூழ்ந்த பிறகு வந்து வடிகால்களைச் சீரமைப்பதால் என்ன பயன். தற்போது வெள்ள நீர் எங்கும் செல்ல வழியில்லாமல் வீட்டினுள் புகுந்துள்ளது. அதிகாலை முதல் வெள்ள நீரை வெளியேற்றி வருகிறோம். எங்கள் தூக்கமே போச்சு. வெள்ள நீரால் எங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

தொடர் மழையால் மொத்தம் 14 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் இரண்டு பேர்கள் மட்டும் காயமடைந்தனர். அண்ணாநகரைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவரது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்துவிழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், கீழக் குடியிருப்பு கிராமத்தில் காசியம்மாள் என்பவரது கூரை வீடு தலையில் விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் மேலக்குடியிருப்பு கிராமம் சின்னம்மாள் என்பவரது வீட்டினுள் தண்ணீர் புகுந்து சுவர் இடிந்து விழுந்து காயமடைந்து  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதல்சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.