வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (04/12/2017)

கடைசி தொடர்பு:17:41 (02/07/2018)

`நீங்கள் கிளீனிக்கே வெச்சு நடத்தி இருக்கீங்க' - ஒருமணிநேரம் மெடிக்கல் கடைக்காரரை வெலவெலக்க வைத்த பெண் அலுவலர்!

``மெடிக்கல் கடை வெச்சுகிட்டு காய்ச்சல்னு வந்த நோயாளிகளுக்கெல்லாம் நீயே ஊசி போட்டிருக்கே. அதுவும் தவறான ஊசி. நீ என்ன டாக்டரா?" என்று  சுகாதார அலுவலர் யாழினி கேட்ட சரமாரிக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அந்த மெடிக்கல் கடைக்காரர் விக்கித்து நின்றார்.

''புதுக்கோட்டை நகரின் அருகில் இருக்கும் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள ஜனதா மெடிக்கலில் டெங்கு காய்ச்சலுக்கு தவறான ஊசியைப் போடுகிறார்கள். இதனால் உடல்நிலை ரொம்பவும் பாதிக்கப்பட்ட இரண்டு பேர்கள் ஜி.ஹெச்-சில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்" என்ற ரகசியத் தகவல் நகராட்சி சுகாதார அலுவலரும் மருத்துவருமான யாழினியின் கவனத்துக்கு வர, உடனடியாக அவர் அந்த மெடிக்கல் கடைக்குப் புறப்பட்டார். கழுத்தில் ஸ்டெத்தாஸ்கோப்பை மாட்டிக்கொண்டு அதிரடியாகக் கடைக்குள் நுழைந்தவர் கடையின் உரிமையாளரிடம் கடைக்கான ஆவணங்களைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். அங்கிருந்த சிறு குப்பைத் தொட்டியை முதலில் ஆராய்ந்தவர் அதிர்ந்துபோனார். அதில் உபயோகப்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள் நூற்றுக்கணக்கில் கிடந்தன. ஆவணங்களுடன் வந்த கடை உரிமையாளரிடம், "இந்த ஊசியெல்லாம் யார் போட்டது?" என்று கேட்க, கடைக்காரர் பதிலேதும் சொல்லாமல் இருந்தார்.

அடுத்ததாகக் குளிர்பதனப் பெட்டியைத் திறந்தவர் அங்கிருந்த திரவ மருந்துக் குப்பிகளைப் பரிசோதித்துவிட்டு, "இந்த மருந்து காய்ச்சலுக்குரியது கிடையாதே. இதை அதிகமா உபயோகப்படுத்தி இருக்கீங்க' என்றவர் ஆவணங்களைப் பார்த்துவிட்டு, "மருந்துக்கடை நடத்தத்தான் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, நீங்கள் கிளீனிக்கே வெச்சு நடத்தி இருக்கீங்க. டாக்டரோட சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகள் தரக் கூடாதுனு சட்டம் சொல்லுது. ஆனா, நீங்க டாக்டருக்கே படிக்காம உங்க கடைக்குத் தலைவலி, காய்ச்சல்னு வர்றவங்களுக்கு ஊசி போட்டு இருக்கீங்க" என்று சரமாரியாக யாழினி கேள்வி கேட்ட, எந்தக் கேள்விகளுக்கும் முறையான பதில். கடை உரிமையாளரிடம் இல்லை. ஒருமணிநேர ஆய்வுக்குப் பிறகு, அந்த மருந்துக்கடைக்கு சீல் வைத்தார் யாழினி. தொடர்ந்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்குச் சென்று அந்தக் கடைமீது புகார் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

இது குறித்து யாழினியிடம் பேசியபோது, "இந்தக் கடையில் சில நாள்களுக்கு முன்பு கனகராஜ் என்ற சிறுவனுக்கு ஊசி போடப்பட்டு, அவன் நிலைமை மோசமாகி, ஜி.ஹெச்சில் சேர்க்கப்பட்டிருக்கிறான். மருந்தாளுநராக இருந்துகொண்டு அந்தக் கடையின் உரிமையாளர் அப்துல் ஜப்பாரும் அங்கே வேலை செய்யும் பெண்ணும் உடல்நலமின்றி வருகிறவர்களுக்குத் தன்னிச்சையாக ஊசி போட்டிருக்கிறார்கள். மனித உடலில் எந்தப் பாகத்தில் ஊசி போடலாம் அல்லது போடக் கூடாது என்பது 'அனாட்டமி' அறிந்த டாக்டர், நர்ஸ்களுக்கு மட்டும்தான் தெரியும். அதைப் பற்றிய கவலையோ பொறுப்போ இல்லாமல் பணம் பண்ணும் நோக்கில் இந்தச் சட்டத்துக்குப் புறம்பான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய காரியத்தை அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பது எனது ஆய்வில் உறுதியானது. அதைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைத்திருக்கிறேன்" என்றார். யாழினியின் இந்த அதிரடி நடவடிக்கை புதுக்கோட்டை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.