வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (04/12/2017)

கடைசி தொடர்பு:20:55 (04/12/2017)

குறைதீர் முகாமில் பெண் கலெக்டருக்கு ஆபாச அர்ச்சனை! சிக்கிக்கொண்ட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ

அரியலூர் மாவட்ட பெண் ஆட்சியரை ஒருமையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ நல்லமுத்துவை காவல்துறையினர் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                    

ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லெட்சுமி ப்ரியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த 1984 ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தின் எம்.எல்.ஏ-வான நல்லமுத்து, தனது நிலத்தை அளந்து கொடுக்கும்படி கலெக்டரிம் பலமுறை மனு கொடுத்திருக்கிறார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியருடன் நல்லமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிப்போய் நல்லமுத்து மாவட்ட ஆட்சியரை ஒருமையில் பேசிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

                

வெளியில் சென்றவர் அங்கிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் லெட்சுமி ப்ரியா நல்லமுத்துவை கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் போலீஸார் நல்லமுத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

                   

இதுகுறித்து முக்கிய அதிகாரிகளிடம் பேசினோம். "முன்னாள் எம்.எல்.ஏ நல்லமுத்து 1986-ல் திருமழப்பாடி அருகில் 18 சென்ட்டில் இடம் வாங்கியிருக்கிறார். கிரயப் பத்திரத்தில் 20 சென்ட் என்று போட்டு வாங்கியிருக்கிறார். இதை அளந்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதன் பேரில் தாசில்தார் முன்னிலையில் 1965 வில்லேஜ் அக்கவுன்ட்ஸ்படி அளந்தபோது 18 சென்ட்தான் இவர் பெயரில் இருக்கிறது. அதை மட்டும் அளந்து கொடுத்துவிட்டார்கள். கிரயப் பத்திரத்தில் 20 சென்ட்டை அளக்க வேண்டும் என்று சொல்கிறார். இது எப்படி முடியும். இன்னொருவருடைய இடத்தை இவருக்கு எப்படி பட்டா போட்டுக் கொடுப்பார் கலெக்டர். இதைச் செய்யவில்லை என்பதால் கலெக்டரை ஒருமையில் திட்டியிருக்கிறார்" என்று முடித்தார்.