காணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்? - முதல்வர் விளக்கம்

குமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பழனிசாமி

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,391 பேர் 29 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இயல்பு வாழ்க்கை திரும்புகின்ற காரணத்தால், தற்போது 9 முகாம்களில், 891 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காணாமல்போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், இந்தியக் கடற்படையின் 15 கப்பல்கள், இந்திய விமானப் படையின் 5 இலகு ரக விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினருடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர, மற்ற இடங்களிலிருந்தும் 284 படகுகளில் சென்ற 2,570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும் அதிலிருந்து 2,384 மீனவர்களும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மீதமிருக்கும் 79 படகுகள் மற்றும் 186 மீனவர்களையும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்ற 74 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்கும் பணியில் கப்பல் படையும் விமானப் படையும் கடலோரக் காவல் படையும் தொடர்ந்து ஈடுபடும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒகி


கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறையினரால் 171 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 சதவிகிதம் குடிநீர் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. புயலால் முறிந்து விழுந்த சுமார் 15,000 சாலையோர மரங்களில் 9,252 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. புயலால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகள் (60 கி.மீ.), மாநில நெடுஞ்சாலைகள் (40 கி.மீ) மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புறச் சாலைகள் (சுமார் 100 கி.மீ)  ஆகியவற்றைச் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.
புயலால் சேதமடைந்த 4,157 குறைந்த அழுத்த மின் கம்பங்களில் 1,998 மின் கம்பங்களும் 2,426 உயரழுத்த மின் கம்பங்களில் 972 மின் கம்பங்களும் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மின் கம்பங்களைப் பழுதுபார்க்கும் பணியை மின்சாரத்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். 

பொதுப்பணித் துறையினரால் 23 கால்வாய்களில் ஏற்பட்ட உடைப்புகளும் 19 ஏரிகளில் ஏற்பட்ட உடைப்புகளும் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள உபரிநீர் தங்கு தடையின்றி செல்ல 9 அடைப்புகளும் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!