கோவை அருகே ஊருக்குள் உலா வந்த விநாயகன்..!

கோவை தடாகம் அருகே காட்டு யானை ஒன்று குடியிருப்புப் பகுதியில் உலா வந்தது.

கோவையை அடுத்த, தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சிலநாள்களாகக் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ஓர் ஆண் காட்டு யானை, கணுவாய் கிராமத்துக்குள் நுழைந்தது. குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த யானையை, வனத்துறையினர் வனத்துக்குள் விரட்ட முயன்றனர். இருப்பினும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், அதே பகுதியில் மீண்டும் மீண்டும் வலம்வந்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உலா வந்தது. வனத்தையொட்டியப் பகுதி வழியாகக் கிராமத்துக்குள் நுழைந்த யானை, அந்தக் கிராமத்தின் தெருக்களில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், போராடி யானையை வனத்துக்குள் விரட்டினர்.

வனப்பகுதிக்குள் சென்ற யானை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் வரவாய்ப்புள்ளதால், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஊருக்குள் வந்த யானையின் பெயர் விநாயகன் என்றும் அந்த யானை அடிக்கடி ஊருக்குள் வரும். அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தடாகம் அருகே காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால், அவற்றுக்கு பெயர் வைப்பதை அந்தக் கிராம மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!