வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (04/12/2017)

கடைசி தொடர்பு:12:36 (05/12/2017)

அதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91


                                  விஷால்

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க

ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், காலை முதலே ஆர்.கே.நகர்த் தொகுதி அதகளப்பட்டது. இன்று மட்டுமே நூற்றுக்கணக்கானோர் மனுவுடன் வந்துவிட்டனர். 'வேட்பாளர்களிடம் மாலை 4 மணிவரை மட்டும்தான் மனுக்கள் வாங்கப்படும்' என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து இருந்ததால், மனுத்தாக்கல் செய்ய வந்தவர்களிடம் ஒரு பரபரப்பு காணப்பட்டது. 


                                 மனுதாக்கல் அலுவலகம் முன்பு...

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க

வேட்பாளர்களின் மனுக்களைத் தனித்தனியாகப் பரிசீலித்து முடிக்க, ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை ஆனதால், வேட்பாளர்கள் வெளியில் காத்துக்கிடந்தனர். அந்த வரிசையில் நடிகர் விஷாலும் இருந்ததால், அவரைப் பார்க்க பொதுமக்கள் முண்டியடித்தனர். மண்டல அலுவலகத்திலிருந்து அடிக்கடி வெளியே தலைநீட்டிய தேர்தல் அலுவலக ஊழியர்கள், "நாங்க கூப்பிடும்போது மட்டும் ஆள்களை உள்ளே அனுப்புங்க. டோக்கன் நம்பர் 68-ன்னு சொல்லும்போது, சுயேச்சை வேட்பாளர் விஷால் உள்ளே வந்தால் போதும். அதேபோல் டோக்கன் நம்பர் 90, வெளியேறி போனபிறகு தீபாவை உள்ளே அனுப்புங்க. அவங்க நம்பர் 91 தான். அவர்களுக்கு முன்னால் வந்து டோக்கன் வாங்கின சுயேச்சைகள் நிறைய பேரு வெளியே காத்திருக்காங்க, மறந்துடாதீங்க. வரிசைப்படியா ஆட்களை அனுப்புங்க" என்றனர். வெளியில் இருந்த மாநகராட்சி ஊழியர்களும் `அலர்ட்'டாக இருந்து வரிசைப்படி ஆட்களை உள்ளே அனுப்பினர்.


                                 பா.ஜ.க.வேட்பாளருடன் தமிழிசை

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க

டோக்கன் வரிசையை மீறி திடீரென்று விஷால் உள்ளே போகப்போகிறார் என்று யாரோ பற்ற வைக்க, "அது எப்படி, நாங்க இவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறோம், விடுவோமா?" என்றபடி  மனுத்தாக்கல் செய்ய வந்த சிலர் மல்லுக்கு நின்றனர். அத்தோடு விட்டாலும் பரவாயில்லை, "பா.ஜ.க, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தேசியக் கட்சிகள், அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளே கூப்பிட்டால் பரவாயில்லை. விஷால் போன்ற சுயேச்சைகளுக்கு எப்படி முன்னுரிமைக் கொடுத்து உள்ளே விட முடியும்" என்று கொந்தளித்தனர். போலீஸ், ஒழுங்குப் படுத்தி வரிசையைக் கண்காணித்தது. விஷாலை முன்னதாக விடக் கூடாது எனக் கொந்தளித்ததில் பலர், விஷாலின் மனுத்தாக்கல் முடிந்ததும் அவரோடு 'செல்ஃபி' எடுத்துக்கொண்டனர்.