வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (04/12/2017)

கடைசி தொடர்பு:07:27 (05/12/2017)

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேத்யூஸின் சதம்: முதல்முறையாக 300 ரன்களைக் கடந்த இலங்கை!

இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சதம் அடித்துள்ளார். 

மேத்யூஸ்

 

இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களம் இறங்கிய இலங்கை சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூஸ், சண்டிமல் சதம் அடித்தனர். எனினும் இறுதிக் கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்துள்ளது. சண்டிமல் 147 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் பின்தங்கி உள்ளது. நடப்பு டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 300 ரன்களைக் குவிப்பது இதுவே முதல்முறையாகும். 

இன்றைய ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்தார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். இந்திய மண்ணில் அவர் அடித்த முதல் சதமும் இதுதான். சதத்தைக் கடந்ததும் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.  மோசமான ஃபார்மில் இருந்துவந்த அவருக்கு இந்த சதம் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அவர் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கு முன்னர் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்து இருந்தார். இந்த சதம் அழுத்தங்களில் இருந்து விடுவித்து இருப்பதாக மேத்யூஸ் தெரிவித்தார்.