வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (04/12/2017)

கடைசி தொடர்பு:07:30 (05/12/2017)

இந்தி நடிகர் சசி கபூர் மறைவு! மோடி இரங்கல்

பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

சசிகபூர்


சசி கபூர் 1938-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-தேதி கொல்கத்தாவில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இந்திப் படவுலகுக்கு வந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் படிப்படியாக முன்னேறி நாயக அந்தஸ்துக்கு உயர்ந்தார். குணச்சித்திர வேடத்திலும், இணைக் கதாநாயகனாகவும், கதாநாயகனாகவும் 175-க்கும் மேற்பட்ட படங்களில் சசி கபூர் நடித்துள்ளார். படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

சசி கபூர் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு இணையாகப் பேசப்பட்டவர். தீவார்,  நமக் ஹலால் உள்ளிட்ட படங்கள் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. ஒருசில ஆங்கிலப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருடைய மனைவி சம்மி கபூர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். இவர் நடிகை ஆவார். இவர்களுடைய வாரிசுகளான கரண் கபூர், குணால் கபூர், சஞ்சனா கபூர் ஆகியோரும் சினிமாத்துறைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தாதா சாகேப், பத்மபூஷண் ஆகிய விருதுகளை சசி கபூர் பெற்றுள்ளார். மூன்று தேசிய விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். 

கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதித்த நிலையில் இருந்த சசி கபூர், மும்பை கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். 
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “சசி கபூரின் நடிப்புத்திறமை தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படும். சசி கபூரின் மரணம் வருத்தமளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.