வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (04/12/2017)

கடைசி தொடர்பு:07:36 (05/12/2017)

மோசடி ஆசாமியைத் திணறடித்த மாற்றுத்திறனாளி! புகைப்படத்துடன் ஆட்சியரிடமும் புகார்

ஏமாற்றுப் பேர்வழிகளை வெளியே சொல்லாமல் மறைக்கும் இன்றைய காலகட்டத்தில் தனக்கு சேலம் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 3 சக்கர மோட்டார் வாகனத்தை ரூ.6,000-த்துக்கு வாங்கித் தருவதாகக் கூறிய ஏமாற்றுப் பேர்வழியைப் புகைப்படத்தோடு கலெக்டர் ரோஹிணியிடம் புகார் கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார் மாற்றுத் திறனாளி  ஜெயா.

இதுபற்றி மாற்றுத் திறனாளி ஜெயா, ’எங்கப்பா பேரு செல்லப்பன். அம்மா ஜெயலட்சுமி. என்கூட பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். நாங்கள் வாழப்பாடி அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தில் வசிக்கிறோம். நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது விபத்தில் என்னுடைய இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. அதன் பிறகு ஊன்றுகோல் உதவியோடு பள்ளிக்குச் சென்று படித்துவிட்டு,  இளநிலை ஆசிரியர் பயிற்சியும் முடித்தேன்.

கடந்த வாரம் எங்க வீட்டிலிருந்து அம்மாப்பேட்டைக்கு பேருந்தில் வந்துகொண்டிருக்கும்போது அன்பு என்பவர் அக்கறையோடு என்னிடம் பேசினார். ''மாற்றுத் திறனாளிகளுக்காக மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகத்தில் 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகிறது. ஏன்? வாங்கவில்லை'' என்றார். நான் ``3 சக்கர மோட்டார் வாகனம் வேண்டி பதிவுசெய்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வண்டி கிடைக்கவில்லை'' என்றேன்.

அதற்கு அவர், ''நான் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மோட்டார் சைக்கிள் பிரிவில் பணியாற்றிவருகிறேன். மாற்றுத்திறனாளிகள் 9,000 கொடுத்தால் 3 சக்கர மோட்டார் வாகனம் கொடுப்போம். உனக்காக 6,000 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். பணம் இருக்கிறதா?'' என்றார். அவர்மீது எனக்குச் சந்தேகம் வந்ததால் வீட்டுக்கு வாருங்கள். அப்பா, அம்மாவிடம் கேட்டுக் கொடுக்கிறேன். என்றேன்.

அதையடுத்து எங்க வீட்டுக்கு வந்தார். எங்க பக்கத்து வீட்டு அண்ணன், '' நீங்க எங்க வேலை பார்க்கிறீர்கள். அதற்கு என்ன சான்று கொடுங்கள்'' என்று கேட்டதற்கு ''இப்படி என்மீது சந்தேகம் அடைந்தால் நான் வாங்கித் தர முடியாது'' என்று அவர் வந்த பைக்கை எடுத்துட்டு போயிட்டார். இதற்கிடையில் அவரை போட்டோ எடுத்துவிட்டேன். இப்படிப் பணம் பறிக்கும் ஏமாற்று பேர்வழிகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக கலெக்டரிடம் புகார் கொடுத்தேன்'' என்றார்.

இதுபற்றி அன்பு என்பவரிடம் பேசிய போது, '' என் பேரு அன்பு. நான் ரேஷன் கடை சேல்ஸ் மேனாக வேலை பார்த்தேன். அரிசி முறைகேடாகக் கொடுத்ததால் என்னை வேலையிலிருந்து தூக்கிட்டாங்க. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ராஜேந்திரன் என்பவர் எனக்குத் தெரியும். அவர் என்னிடம் ஊனமுற்றவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள், ரூ.9,000-த்துக்குக் கொடுக்கும் 3 சக்கர மோட்டார் வண்டியை, ரூ.6,000-த்துக்குக் கொடுப்பதாகச் சொன்னதை அடுத்து, அந்தப் பெண்ணிடம் சொன்னேன். பிறகு பணம் வாங்குவதற்காக அவுங்க வீட்டுக்குப் போனேன். பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் சந்தேகப் பேர்வழியாக பேசினார். எதுக்கு நமக்கு வம்புன்னு வந்துவிட்டேன்'' என்றார்.