ஆக்கிரமிப்பால் சாலையைச் சந்துபோல் மாற்றிப் பதிவுசெய்ய முயற்சி! கொதிக்கும் முதல்வர் தொகுதி மக்கள்

''முதல்வர் தொகுதியான எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  சாலை ஆக்கிரமிப்பால் 40 ஆண்டுகளாக தார்ச்சாலை வசதியும், சாக்கடை வசதியும் இல்லாமல் தவிக்கின்றோம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு முதல்வரின் உறவினர்களும், கட்சிக்காரர்களும் ஆதரவாக இருப்பதால், நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறார்கள்'' போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சேலம் கலெக்டரிடம் ஊர் மக்கள் மனு அளித்தனர்.

மனு அளித்த குப்புராஜ் என்பவரிடம் பேசினோம், ''நாங்கள் எடப்பாடி நகராட்சி 18-வது வார்டு மேட்டுத்தெரு, சின்னமணலி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். நாங்கள் செல்லும் சாலையில் பருவதராஜகுல கல்யாண மண்டபத்துக்குக்  கீழ் உள்ள காமராஜர் சாலையிலிருந்து, சின்னமணலில் கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரை உள்ள சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலை முன்பு பஸ், லாரி, கன்டெய்னர் எனப் பல வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக இருந்துவந்தது.   

ஆனால், தற்போது இந்தச் சாலையை ஆக்கிரமிப்பு செய்துவிட்டதால் எந்த வாகனமும் உள்ளே வர, போக முடிவதில்லை. அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம்கூட வர முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. பள்ளி வாகனங்கள் உள்ளே வர முடியாததால் பள்ளிக் குழந்தைகளை டூ விலரில்  அழைத்துச்செல்லும் நிலை இருக்கிறது. இந்தச் சாலை ஆக்கிரமிப்பால் 40 ஆண்டுகளாக எங்க ஊரில் தார்ச் சாலை போடாமலும், சாக்கடை கட்டாமலும் இருக்கிறார்கள்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களும், கட்சிக்காரர்களும் ஆதரவாக இருப்பதால், நகராட்சி அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்தச் சாலை எடப்பாடி நகராட்சி ஆவணத்தில் பிரதான சாலையாக இருக்கிறது. ஆனால், தற்போது நகராட்சி அதிகாரிகள் மூலம் இந்தச் சாலை பதிவை, நகராட்சி சந்து என மோசடியாகப் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாங்கள், கலெக்டர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், எஸ்.பி., எடப்பாடி இன்ஸ்பெக்டர் எனப் பலரிடமும் மனு கொடுத்துவிட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலையும், புதிய சாக்கடை வசதியும் செய்து கொடுக்க வேண்டும்'’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!