வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (05/12/2017)

கடைசி தொடர்பு:08:21 (05/12/2017)

வாய்க்காலுக்குப் பட்டா போட்ட ஓய்வுபெற்ற குமாஸ்தா! கலெக்டரிடம் புகார் கொடுத்த சேலம் மக்கள்

சேலம் ராஜவாய்க்கால் பகுதி மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

சேலத்தில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் கடந்த தீபாவளி அன்று 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது. உடனே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் எங்க ஊருக்கு வந்து, ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் வெளியேறச் செய்தார்கள். ஆனால், மீண்டும் சாமுவேல் என்பவர் ராஜவாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார் என்று அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்கள்.

இதுகுறித்து புகார் அளிக்க வந்திருந்த சுகுணாவிடம் பேசினோம், ''நாங்க சேலம் அம்மாப்பேட்டை கரைமேடு முனியப்பன் கோயில் அருகே அசோக்நகர் மூன்றாவது தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறோம். அம்மாப்பேட்டை ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக வெள்ளைக்குட்டைக்குச் செல்லும்.

இந்த ராஜவாய்க்காலை நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக இருந்து ஓய்வுபெற்ற சாமுவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததால், கடந்த தீபாவளி சமயத்தில் அம்மாப்பேட்டை ஏரி நிரம்பி, ராஜவாய்க்காலில் செல்ல முடியாததால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.

இதனால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்ததால் உடனே கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்க பகுதிக்கு வந்து ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வெறியேறச் செய்தார்கள். தற்போது மீண்டும் சாமுவேல் என்பவர் 6 மீட்டர் அகலம் உள்ள ராஜவாய்க்காலை 3 மீட்டர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார். இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் இருக்கிறது. மழை வந்தால் மீண்டும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.  

இதுபற்றி சாமுவேலிடம் கேட்டால் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். ராஜவாய்க்கால் என்னுடைய, பட்டா நிலத்தில் இருக்கிறது. நீங்கள் எங்கு சென்று புகார் கொடுத்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்று திட்டுகிறார். அதனால் கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்திருக்கிறோம். ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்'' என்றார் ஆதங்கத்தோடு.