யூரியா சாக்கில் மணல் நிரப்பி நூதன முறையில் கொள்ளை! கொதிக்கும் கரூர் மக்கள்

 

முசிறியைச் சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் போட்ட வழக்கில்,'கரூர் தொடங்கி திருச்சி வரையில் காவிரியில் மணல் அள்ளக் கூடாது' என்று தீர்ப்பு எழுதினார்கள் நீதிபதிகள். அதைத் தொடர்ந்து, அரசு நடத்தி வந்த மணல்குவாரிகள் இழுத்து மூடப்பட்டன. ஆனால், ஆளும்புள்ளிகள் தங்கள் 'பவரை' வைத்து மணல் கொள்ளையை நடத்தி வந்ததாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'புதிதாக 70 மணல் குவாரிகள் கட்டுமானப் பணிகளுக்காகத் திறக்கப்படும்' என்று அறிவித்தார். அதற்கும், நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட ஆளும் புள்ளிகள் யூரியா சாக்குகளில் நூதனமாக மணல் கடத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது சிந்தலவாடி. இந்த கிராமத்தையொட்டிப் போகும் காவிரி ஆற்று தென்கரை ஓரமாக மணல் சாக்குகளில் ஆளும் புள்ளிகள் சிலர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி மணல் கடத்துவதாகப் பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

இதுபற்றி அந்தப் பகுதி மக்கள் சிலரிடமே கேட்டோம். ’’கரூர் மாவட்ட காவிரியில் சுத்தமா மணலை சுரண்டி அள்ளி, விதிமுறைகளை மீறி கொள்ளையடிச்சு ஏற்கெனவே மூவாயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டிட்டாங்க. காவிரியே மணலில்லாத எலும்புக்கூடா மாறிடுச்சு. ஆனால், இப்போ காவிரியில் வரும் தண்ணீர் உருட்டி வரும் கொஞ்சம் மணலையும், நீதிமன்ற உத்தரவையும் மீறி யூரியா சாக்குகளில் அள்ளிக் கடத்துறாங்க ஆளுங்கட்சிப் புள்ளிகள் சிலர். அவர்கள் இந்த மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி, இப்படிக் கடத்துறாங்க. லோக்கல் மக்கள் வீடு கட்டவோ, மற்ற வேலைகளுக்கோ கொஞ்சமா மணல் அள்ள போனா, அதிகாரிகள் புடிச்சு கேஸ் போடுறாங்க. ஆனால், வெளியூர்களைச் சேர்ந்த சிலர் இங்கே யூரியா சாக்குகளில் மணலை அள்ளி, ஆட்டோவில் ஏத்திக்கொண்டு போய், மறைவிடமா வச்சு லாரிகளில் ஏத்தி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்குக் கடத்துறாங்க. ஒரு மூட்டை மணல் ரூ.750 வரையிலும் அவர்கள் விலை வெச்சு விற்கிறாங்களாம். நாங்க விலைக்குக் கேட்டா மட்டும் தரமாட்டேங்குறாங்க. இந்த நூதன மணல் கடத்தலை உடனே மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தணும். இல்லைன்னா, எங்க கட்டுக்கடங்கா போராட்டம் அத்தகைய மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தும்" என்றார்கள் சூடாக.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!