வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (05/12/2017)

கடைசி தொடர்பு:07:06 (05/12/2017)

``சேலம் மாநகராட்சியும் மந்தமாகத்தான் இருக்கிறது!'' - எருமைமீது ஏறிவந்து சேலம் கலெக்டரிடம் மனு அளித்த நபர் கலகல!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்க்கு பார்த்தீபன் என்பவர் நூதன முறையில் எருமை மாட்டின் மீது ஏறி வந்து கலெக்டர் ரோஹிணியிடம் புகார் மனு அளித்தார். இது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனுதாரர் எருமை மாட்டின் மீது ஏறி வருவதை அறிந்த காவல்துறையினர் எருமையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

எருமை மீது ஏறி வந்த பார்த்திபன், ''சேலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாமல் அப்படியே கிடக்கிறது. சேலம் மாநகராட்சிக்குள் நடைப்பெறும் மேம்பாலப் பணிகள் நிறைவடையாமல் இடப்பதால் போக்குவரத்து நெரிசல் உருவாகி இருக்கிறது. இதனால் பல விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சேலம் தனிக் குடிநீர் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. சேலத்தில் உள்ள திருமணிமுத்தாறு அபிவிருத்தி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருக்கிறது. இது கொசுக்கள் உற்பத்தி நிலையமாக இருந்து வருகிறது. சேலம் கலெக்டர் ரோஹிணி வீடு வீடாக சென்று கொசுகள் உற்பத்தி ஆகும் வகையில் நல்ல தண்ணீர் வைத்திருந்தால் அபராதம் போட்டார். ஆனால் சாக்கடையாக இருக்கும் திருமணிமுத்தாறில் கொசு ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார். மொத்தத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம், சேலம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அனைத்தும் முடங்கிப் போய் செயல்படாமல் இருந்து வருகிறது. அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் எருமை மாடு எப்படி மந்தமாக நடந்து வருமோ  அதைப்போல மாநகராட்சி நிர்வாகமும் மந்தமாக செயல்பட்டு வருகிறது'' என்றவரிடம், `எங்கிருந்து இந்த எருமையை பிடித்து வந்தீர்கள்?', என்றதற்கு ``கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டி வந்தவரிடம் கேட்டு வாங்கிட்டு வந்ததாகச்' சொல்லி அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கினார்.