வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (05/12/2017)

கடைசி தொடர்பு:10:10 (05/12/2017)

மேகமலை வழக்கு: தமிழக வனத்துறைச் செயலர், தேனி மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவு!

 

 

மேகமலை வனப்பகுதியில் அதிகரிக்கும் சட்ட மீறல்குறித்து நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. 

தேனி தாமரைக்குளத்தைச் சேர்ந்த பாண்டி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மேகமலை வனவிலங்கு கோட்டம், சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கியப் பங்காற்றக்கூடிய பகுதி. சுமார் 90 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வைகை ஆற்றின் தொடக்கமாகவும் மேகமலை உள்ளது. மேகமலை, நீராதாரமாக மட்டுமன்றி, வனச்செழிப்பு மிக்க பகுதியாகவும் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, புள்ளிமான், தமிழக தேசிய விலங்கான வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. பாதுகாக்கப்படவேண்டிய பட்டியலில் உள்ள சிங்கவால் குரங்குகள் 350 க்கு மேல் இந்தப் பகுதியில் உள்ளன. மேகமலை வனப்பகுதி, கேரள பெரியார் புலிகள் காப்பக வனப் பகுதியையும், விருதுநகர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இவ்வளவு முக்கியமான மேகமலை வனப்பகுதியில், தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவருகின்றன. இவற்றால், கஞ்சா வளர்ப்பு, காடுகளை அழித்து விவசாயம் செய்தல், மரங்களை வெட்டுதல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்கள் நடைபெற்றுவருகின்றன.  2 மாதங்களுக்கு முன்பு, பாதுகாக்கப்படவேண்டிய பட்டியலில் இருக்கும் 7 சிங்கவால் குரங்குகள், விஷம் வைக்கப்பட்ட பலாப்பழங்களை உண்டதால் இறந்து போயின. சுற்றுச்சூழல் சமநிலைப்படுத்துதலில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த மேகமலைப் பகுதியில், சுமார் 300 மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளின் ஆய்விலும் நவீன கருவிகளைக்கொண்டு மரம் வெட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோதச் செயல், வனத்துறை அலுவலர்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனூத்து, நொச்சியோடை, அஞ்சாரப்புலி, காந்திகிராமம் உள்ளிட்ட கிராமங்களில் வனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்குள்ள மரங்களை வெட்டி விவசாயம் செய்வது அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள், சட்டவிரோதமாக வைகை ஆற்றுத்தண்ணீரையும் உறிஞ்சுகின்றனர். உச்ச நீதிமன்றம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மரங்களை வெட்டத் தடை விதித்துள்ளது. ஆனால், தேனி வனக்காப்பாளர் ஆனந்தகுமார், உதவி வனப்பாதுகாவலர் நாகையா, தேனி வன அலுவலர் காஜா மொகைதீன், இக்பால் ஆகியோர் சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதை ஊக்கப்படுத்துகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை கோரியும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, மேகமலைப் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட பகுதியின் சூழலை மறுசீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்ட விரோதமாக மரங்களை வெட்ட துணைபோனவர்கள்மீது விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக வனத்துறைச் செயலர், தமிழக முதன்மை வனப்பாதுகாவலர், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அடங்கிய அமர்வு, இதுகுறித்து தமிழக வனத்துறைச் செயலர், தமிழக முதன்மை வனப்பாதுகாவலர், தேனி மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, ஜனவரி 10-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.