ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிப்படை வசதி செய்துதரக் கோரி நீதிமன்றத்தில் மனு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர், உணவு, மின்சாரம், போக்குவரத்து, காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

கன்னியாகுமரியைச் சேர்ந்த வில்சோ டாஸ்பின், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், `குமரி மாவடத்தில் 10 லட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். ஒகி புயலால் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியது. இதனால், சுமார் 50 ஆயிரம் மரங்களும் 6000 மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் சாலைப் போக்குவரத்து முழுவதுமாக தடைப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், 5 நாள்களாக குமரி மாவட்டம் இருளில் மூழ்கியுள்ளது. குடிநீர், உணவு, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கப்பெறாமல், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், தற்போது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் தவறிவிட்டது. காவல்துறையினர் முறையான பாதுகாப்பில் ஈடுபடாத காரணத்தால், ஒகி புயல் சூழலைப் பயன்படுத்தி, திருட்டு முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள குமரி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிகிச்சை அளிக்கப் போதுமானதாக இல்லை. அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கப்பட்டோரிடம் கொண்டுசெல்ல ஆள்கள் பற்றாக்குறையும் உள்ளது. ஆகவே, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர்,  உணவு, மின்சாரம்,  போக்குவரத்து,  காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!