வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (05/12/2017)

கடைசி தொடர்பு:08:25 (05/12/2017)

புயலில் இறந்த தூத்துக்குடி மீனவர்களின் உடலைப் பெற்றுத்தர வலியுறுத்தி மீனவர்கள் சாலைமறியல்

ஒகி புயலில் சிக்கி மாயமான தூத்துக்குடி மீனவர்களில், மீட்கப்பட்ட 3 மீனவர்களின் உடலை கேரள அரசு  தர மறுப்பதாகப் புகார் கூறி, தூத்துக்குடியில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudi fishermans strike

கடந்த 28-ம் தேதி, தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடல்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது, ஒகி புயலில் சிக்கி மாயமான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப், ரவீந்திரன், ஜெகன், கினிஸ்டன், ஜூடு மற்றும் ஜூடுவின் மகன் பாரத் ஆகிய 6 மீனவர்கள் மற்றும் முட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் என மொத்தம் 16 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

fishermans strike in thoothukudi 

குளச்சலில் இருந்து சுமார் 45  கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, ஒகி புயலால் விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் முட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ், ஜான்சன் ஆகிய 3 பேரையும் மீட்டனர். இவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் முட்டத்தைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 13 பேரின் நிலை என்ன ஆனது என்ற தகவல் தெரியாத நிலையில் இருந்தது. விழிஞ்சம்  துறைமுகப்பகுதியில் கரை ஒதுங்கிய 7 மீனவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த  ஜூடு, ரவீந்திரன் மற்றும் ஜோசப் ஆகிய 3 பேரின் உடல்கள்  அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது. மீதமுள்ள கினிஸ்டன், பாரத் ஆகியோரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்நிலையில் இந்த மீனவர்களின் உடலை கேரளஅரசு தர மறுப்பதாக குற்றம் சாட்டி, தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியில்  பெண்கள் சாலையின் குறுக்கே மரம், கற்களைப் போட்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். “எங்க காலனியைச் சேர்ந்த 3 மீனவர்களின் உடலை அடையாளம் காட்டியும், கேரள அரசு தர மறுக்கிறது. உடலை மீட்டு எங்களிடம் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இதைவிட பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர். மீனவர்களின் சாலை மறியலால், சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க