வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (05/12/2017)

கடைசி தொடர்பு:08:14 (05/12/2017)

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த தனது மகனுக்காக நியாயம் கேட்கும் தந்தை!

 

palani

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உலகாணி என்ற ஊரைச் சேர்ந்தவர், முருகன். அவர், நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமில் மனு ஒன்றை அளிக்க வந்திருந்தார். இறுகிய முகத்துடன் காணப்பட்ட முருகனிடம் நாம் என்னவென்று கேட்க, தனது துயரத்தை நம்முடன் பகிர்ந்தார். `என் ஒன்பது வயது மகன் பழனிச்செல்வம், அருகேயுள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார். குண்டாற்றில், 45 அடி ஆழத்தில்  கிணறு போன்ற அமைப்பில் குழி ஒன்றை வெட்டி வைத்துள்ளனர். அப்போது அவ்வழியே சென்ற பழனி, அக்கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டான். அவனுடன் சேர்த்து மொத்தம் மூன்று பேர் அக்கிணற்றால் இறந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே, அக்கிணற்றின் உரிமையாளரான கிருஷ்ணன் மீதும்  பழனியை முறையாகக் கவனிக்காமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்ட ஆசிரியர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதோடு, சிறுவனின் இறப்புக்கு தகுந்த நிவாரணமும் வழங்க வேண்டும்' என்றார்.

 

முறையான அனுமதியும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் தோண்டப்படும் குழிகளால் ஏற்படும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசு இதைக் கவனித்து, மக்கள் நலன் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.