`தற்கொலையைத் தவிர வேறு வழி இல்லை!' - கலக்கத்தில் மதுரை தெற்குத் தொகுதி மக்கள்

மோசடி

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிலால் குஷ்வாகாவால் என்பவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிதி நிறுவனம் மற்றும் பால் பண்ணை சார்ந்த தொழில்கள் நடத்திவருகிறார். இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனங்களைத் தொடங்கினார். நிதி நிறுவனங்களின் இயக்குநராக அவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் அமர்த்தப்பட்டனர். ஏழை மக்களிடம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை வசூல்செய்துள்ளார்.  மக்கள் செலுத்திய பணம் முதிர்வடைந்த பின்னும் பணத்தை திருப்பித் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியுள்ளனர். மேலும், பணம் கொடுத்து ஏமாந்த ஏழை மக்களை டெல்லி மற்றும் ராஜஸ்தானுக்கு அலையவிட்டுள்ளனர். பன்வாரிலால் குஷ்வாகாவால், தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றியிருக்கிறார்

இந்நிலையில், கரிமாஅக்ரிடெக் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மதுரை தெற்குத் தொகுதியைச் சேர்ந்த மக்கள், கூட்டாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், `பன்வாரிலால் குஷ்வாகாவால் ஏழை மக்களிடம் ஏமாற்றி பெறப்பட்ட பணத்தை கரீமா அக்ரிடெக் நிறுவனத்தினர் திருப்பி அளிக்க வேண்டும். அதற்கு உடன்படாத பட்சத்தில், இந்த மோசடிக்காரர்களை கைதுசெய்ய வேண்டும். இந்த மோசடி நிறுவனத்தின் இயக்குநர்களான பன்வாரிலால் குஷ்வாகா, அவரது மனைவி மற்றும் சகோதரர்களின் சொத்துகள், நிறுவனங்களைப் பறிமுதல் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே, பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணைத் தலைவர் மற்றும் காவல்துறை ஐ.ஜி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என்று கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!