வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (05/12/2017)

கடைசி தொடர்பு:16:07 (09/07/2018)

ஆம்பூரில் `நாய் பிரியாணி'... பிரியாணிப் பிரியர்கள் வயிற்றில் கிலி!

வேலூர் மாவட்டம் ஆம்பூர், பிரியாணிக்கு ஃபேமஸ். 'ஆம்பூர் பிரியாணி' என்ற பெயரிலேயே தமிழ்நாட்டின்  மூலைமுடுக்கெல்லாம்  தள்ளுவண்டி பிரியாணிக் கடைகள் சக்கைப்போடுபோடுகின்றன. இந்நிலையில, பிரியாணி என்ற பெயரில் `நாய் பிரியாணி'  விலைகுறைவாகக் கிடைத்து வந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிரவைக்கும் இந்த நாய் பிரியாணி குறித்து விசாரித்தோம்.

பிரியாணிக்காக தோல் உறிக்கப்பட்ட நாய்
 

"ஆம்பூரில் அசைவம் சார்ந்த சிறிய, பெரிய ஓட்டல்கள் பெருமளவில் இருக்கின்றன. அதனாலேயே, தெருநாய்களும் இங்கு அதிகமாக இருக்கின்றன. மாலை நேரங்களில் தள்ளுவண்டிகளில் குறைவான விலையில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையாகும். அதை சாப்பிடுபவர்களைச் சுற்றி, எப்போதும் பத்து நாய்கள் வாய் பார்த்துக்கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளெல்லாம் இங்கே சர்வசாதாரணமாக நடக்கும். மட்டன் பிரியாணி 60, 70 ரூபாய்க்கே இங்கே கிடைக்கும். இவ்வளவு  மலிவாக மட்டன் பிரியாணி தரமுடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். மட்டன் பிரியாணியில், மாட்டுக்கறியும் கலந்திருக்கும் என்று நினைத்துதான் உள்ளூர்க்காரர்களே அப்படியான கடைகளில் சாப்பிடுவார்கள். இப்போதுதான் தெரிகிறது, கசாப்புக்கடைக்காரர்களோடு சேர்ந்துகொண்டு மட்டனில் நாய்க் கறியைக் கலந்துகொடுத்திருக்கிறார்கள்" என்று பதறுகிறார்கள் ஆம்பூர்வாசிகள்.

"நாய்க்கறி, ஆட்டுக்கறி வித்தியாசம் தெரியாமல் இருக்க, 'அஜினோமோட்டோ'வையும் புதினா எஸ்ஸென்சையும் அதிக அளவில் கலந்து விடுகிறார்கள். அத்துடன் சுடச்சுட அதைத் தருவதால், கறி குறித்த சிந்தனையே மறைந்துவிடும். மேலும், இப்படியான இடங்களில் சாப்பிடுவதற்குப் போதை ஆசாமிகளே வருவதால், கடைக்காரர்களுக்கு ரொம்பவும் வசதியாகப்போய்விட்டது" என்கிறார்கள் உள்ளூர் விவரம் அறிந்தவர்கள்.