வெளிநாடுகளில் வேலை: போலி ஏஜென்ட்டுகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

அமல்ராஜ் ஐ.பி.எஸ்

கடந்த சில நாள்களுக்கு முன், திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள சனரிஸ் எனும் நிறுவனத்தை நடத்திவரும் நாசர் என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிவந்ததால், பொதுமக்கள் நாசரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.  

இந்நிலையில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்ஸி மற்றும் ஏஜென்ட்டுகள், வெளிநாடுகளில் வேலைக்கு ஆள்களை அனுப்புவதாகக் கூறி, இளைஞர்களிடம் பணத்தைப் பெற்று, வெளிநாட்டு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றுவதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்,

“வெளிநாடுகளில் வேலைக்கு ஆள் அனுப்பும் டிராவல் ஏஜென்ஸிகள்,  இந்திய அரசின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதை, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் செயல்படும் டிராவல் ஏஜென்ஸிகள் மற்றும் நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் டிராவல்ஸ் நிறுவனங்கள், ஏஜென்ட்டுகள் மற்றும் தனிநபர்கள், மத்திய அல்லது மாநில அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளையோ, விளம்பரங்களையோ நம்பி ஏமாற வேண்டாம். அவர்கள்மீது ஏதேனும் சந்தேகம் இருப்பின், காவல்துறை மூலமாகத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பொய்யான வேலை வாய்ப்புகுறித்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகள்குறித்து தகவல் தெரிந்தால், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகாராகவோ அல்லது திருச்சி மாநகர காவல் ஆணையரக வாட்ஸ்அப் எண்: 96262-73399 என்ற இணைப்புமூலம் தகவலாகவோ அளிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யும் பொதுமக்கள், முறையான அனுமதியின்றி செயல்படும் டிராவல்ஸ் ஏஜென்ஸிகள் மற்றும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம். சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்தே வேலைக்கு ஏற்பாடுசெய்வதாகக் கூறும் பொய்யான வாக்குறுதியை நம்ப வேண்டாம். சுவரொட்டிகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!