தி.மு.க பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு! சிசிடிவியில் சிக்கிக்கொண்ட ரவுடிக் கும்பல்

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

கூடுவாஞ்சேரி அடுத்துள்ள பெருமாட்டுநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது பெருமாட்டுநல்லூர். அப்பகுதியில் உள்ள துலுக்காணத்தம்மன் கோயில் தெருவில் வசித்துவருகிறார் முன்னாள் பெருமாட்டுநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவர் ரவி. இவர், காட்டாங்கொளத்தூர் தி.மு.க ஒன்றியச் செயலாளருமாக இருந்துவருகிறார். கடந்த சில தினங்களாக 5 லட்சம் பணம் கேட்டு நெடுங்குன்றம் சூர்யா என்ற ரவுடி செல்போனில் மிரட்டி வந்திருக்கிறான். அதற்கு ரவி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், நேற்று இரவு ரவி வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அவரது தம்பி குமார் வந்தார். அப்போது அவரை சூர்யா உட்பட மூன்று பேர் பின்தொடர்ந்தனர். திடீரென கையில் வைத்திருந்த நாட்டுவெடிகுண்டுகளை வீசினர். இதில் குமார் படுகாயம் அடைந்தார்.

உறவினர்கள் அலறல் சத்தம் கேட்டதும் அந்தக் கும்பல் ஓட்டமெடுத்தது. போலீஸ் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, சூர்யா உட்பட மூன்று பேரின் உருவமும் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரவி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது ரவிக்கு மீண்டும் மிரட்டல் தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!