Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு எதிராக ஆர்.கே.நகர் புறப்பட்டது விவசாயிகள் படை!

விவசாயிகள்

Tiruchirappalli: 

டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய, விவசாயிகள் மனித எழும்புக்கூடுகளுடன் திருச்சியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று சுமார் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டனர். அப்போது, மனித எழும்புகளை வாயில் கடித்தபடியும், மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டபடியும்  பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு ரயிலில் கிளம்பினர்.

அப்போது விவசாயிகள், “காவிரி நதி நீர் மேலாண்மை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கடந்த ஏப்ரல் மாதம் முதல்  141 நாள்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டோம். பிரதமர் மோடி எங்களைக் கண்டுகொள்ளவில்லை. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாகத் தள்ளுபடிசெய்வதாகக் கூறிய முதல்வரும் கண்டுகொள்ளவில்லை. விளைபொருள்களுக்கு லாபகரமான விலையும் கொடுக்கவில்லை. கடன் தள்ளுபடியும் செய்யவில்லை. இதனால், விவசாயிகள் பலர் தற்கொலைசெய்துகொண்டனர்.

இந்நிலையில், மத்திய அரசே... மத்திய அரசே! விவசாயிகளின் நிலையை பாரீர்! மனித எலும்பையும், மண்டை ஓட்டையும் திண்ணும் நிலைக்கு விவசாயிகளை ஆளாக்கிவிட்டார் இந்தியப் பிரதமர். இதனால்,  மனித எலும்பைத் திண்ணும் போராட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு மேல்  ஆர்.கே. நகரில் நடத்த உள்ளோம். ஆர்.கே.நகர் தொகுதி மக்களே..! ஊருக்கே உணவு படைத்த விவசாயிகளை மண்டைஓடு திண்ண வைத்தவருக்கு ஓட்டளிக்கலாமா? என ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் ஊர்வலமாகச் சென்று நியாயம் கேட்க உள்ளோம்'' என்றனர்.

இறுதியாகப் பேசிய அய்யாக்கண்ணு, “எங்கள் சங்கம் சார்பில், மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். அதை, மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளைப் பார்த்தாலே பாவம். தொட்டாலே தீட்டு என நினைக்கிறார்கள். தேர்தல் என்று வந்தால் மட்டும் வந்து நிற்கிறார்கள்.  எனவேதான், விவசாயிகளைப் புறக்கணிக்கும் கட்சிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் ஓட்டு போடக்கூடாது என  ஆர்.கே.நகர் தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளோம்.  ஜனநாயக நாட்டில், ஒரு பிரதமர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றுவது, அவரின் கடமை என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், அதை பிரதமர் செய்ய மறுக்கிறார். அதனால், பி.ஜே.பி-க்கு ஓட்டு போடாதீங்க எனப் பிரசாரம் செய்யப்போகிறோம். நாங்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை” என்றார்.

ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில், இன்று முதல் அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலை, ஆர்.கே.நகரில் பி.ஜே.பி., அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சியிலிருந்து புறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement