வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (05/12/2017)

கடைசி தொடர்பு:17:28 (05/12/2017)

`ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த உதவிகள் என்ன?' - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி கொடுமுட்டி பெத்தேல்புரத்தைத் சேர்ந்த வில்ஸ்டோ தாஸ்பின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்குதலால் 50 ஆயிரம் மரங்கள், 6,000 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளின் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் நவம்பர் 30-ம் தேதியிலிருந்து மாவட்டத்தில் மின்சாரம் இல்லை. ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் தீவுபோல் மாறியுள்ளது. வீட்டைவிட்டு வெளியே வர முடியாதத் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் குடிநீர், உணவு, மின்சாரம், போக்குவரத்து, மருத்துவ வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 500 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கவோ காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. புயலுக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். சாலையோரங்களில் விழுந்துகிடக்கும் மரங்களையும் மின்கம்பங்களையும் அகற்றும் பணியைத் தன்னார்வலர்களே மேற்கொண்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் சார்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை. எனவே கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, மின்சாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகளையும் போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.