நாளை நெல்லை வருகிறார் ஆளுநர்: அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த திட்டம்?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நெல்லைக்கு நாளை வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக்கூடும் என்பதால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த வெள்ளிவிழா பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு 46,219 பேருக்கு பட்டமளிக்கிறார். அவர் நேரடியாக 752 பேருக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற்காகக் காலையில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தரும் அவர், பின்னர் கார் மூலம் பல்கலைக்கழகம் வந்து சேருகிறார். 

பல்கலைக்கழக நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட அவர் விருந்தினர் மாளிகையில் நெல்லை மாவட்ட அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக்கூடும் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் நெல்லை மாவட்ட அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்திய விவகாரம் அரசியல்ரீதியாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் வேறு எங்கும் ஆய்வு நடத்தவில்லை. இந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநராக அக்டோபர் 6-ம் தேதி பொறுப்பேற்ற பின்னர், இரு பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்ற அவர் மூன்றாவது பட்டமளிப்பு நிகழ்ச்சியாக நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருகிறார். அவரின் வருகை சர்ச்சையைக் கிளப்புமா என்பது நாளைதான் தெரிய வரும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!