கூடங்குளம் இரு அணு உலைகளிலிருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி!

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் உள்ள இரு அணு உலைகளும் முழு கொள்ளளவை எட்டின. அதனால், தற்போது அணு உலைகளிலிருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணு உலை

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இரு உலைகளும் அடிக்கடி பழுதடைந்ததால் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக அணு உலை எதிர்ப்பாளர்களும் சந்தேகத்தைக் கிளப்பி வந்தனர். அதற்கு ஏற்ப பெரும்பாலான சமயங்களில் இரு உலைகளில் ஏதாவது ஓர் அணு உலை பழுது காரணமாக மின் உற்பத்தியை நிறுத்தும் நிலைமை நீடித்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுது காரணமாக நிறுத்தப்பட்ட இரண்டாவது அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஏற்கெனவே முதல் அணு உலையில் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது அணு உலையும் முழு கொள்ளளவை இன்று எட்டியது. இது தொடர்பாகக் கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநரான எஸ்.வி.ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இரு அணு உலைகளும் முழு உற்பத்தி அளவான 1,000 மெகாவாட் இலக்கை 5-ம் தேதி காலை 3.30 மணிக்கு எட்டின.

இதன் மூலம் இரு அணு உலைகளிலும் இருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு உலை மூலமாக ஒரே இடத்திலிருந்து அதிகபட்சமாக 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நாட்டிலேயே முதல் முறை என்பதால் கூடுதல் சிறப்புக்கு உரியது. கூடங்குளம் முதல் அணு உலையிலிருந்து இதுவரை 16,079 மில்லியன் யூனிட் மின்சாரமும் 2 வது அணு உலையிலிருந்து இதுவரை 4,784  மில்லியன் யூனிட் என மொத்தம் 20,863 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்து உள்ளார்.

2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அணு உலை நிர்வாகம் அறிவித்துள்ள போதிலும், பவர் கிரீட் அளவீட்டில் கூடங்குளம் அணு உலையிலிருந்து 1,723 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பெறப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, `அணு உலை செயல்பாட்டுக்காகவும் அணு உலை வளாகத் தேவைக்காகவும் அந்த 277 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது’ எனத் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!