`வீடியோ ஆதாரம் இருக்கிறது; முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்!’ - தேர்தல் அதிகாரியிடம் விஷால் முறையீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் விஷால் முறையிட்டு வருகிறார். 

vishal
 

டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். மனு மீதான பரிசீலனைக்காக இன்று காலையே நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்துவிட்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொகுதியில் தங்கிய விஷால், அங்கிருந்தபடியே நிலவரங்களைக் கேட்டறிந்தார். விஷால் மனு மீதான பரிசீலனை இரண்டரை மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இறுதியில் விஷால் வேட்புமனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். வேட்புமனுவைத் தாக்கல் செய்பவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன் மொழிய வேண்டும் என்பது விதி.



இந்த நிலையில், விஷாலை 10 பேரில் இரண்டு பேர் முன்மொழியவில்லை என்று  கூறி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். விஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்துப்போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்து போட்ட தீபன் ஆகியோர் கையெழுத்துப் போடவேயில்லை என்று பின்வாங்கிவிட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல் அதிகாரியிடம் இதை முறையிட்ட விஷால் தற்போது அங்கு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஆர்.கே.நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தர்ணாவில் ஈடுபட்ட விஷாலிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!