`நான் பெறும் முதல் விருது இது! ‘ - அறம்’ கோபி நயினார் நெகிழ்ச்சி

`அறம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தின் சில காட்சிகள் பொழுதுப்போக்குகாகப் படம் பார்க்கச் சென்றவர்களையும் கண் கலங்கச் செய்தது. சமூக வலைதளங்களில் `அறம்’ கொண்டாடப்பட்டது. இத்தகைய அழுத்தமான படைப்பைக் கொடுத்த அறம் இயக்குநர் கோபி நயினாருக்கு இந்த ஆண்டின்  `சமூக மாற்றத்துக்கான படைப்பு’ விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது எவிடென்ஸ் அமைப்பு. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கோபிக்கு விருது வழங்கினார் `எவிடன்ஸ்’ கதிர். `நான் பெறும் முதல் விருது இது’ என இந்நிகழ்வில் கோபி நெகிழ்ந்துள்ளார்.

அறம் கோபி
 

`அறம்’ விருது குறித்து எவிடன்ஸ் கதிரை தொடர்புகொண்டு பேசினோம்...

 “ ‘அறம்’ எளிய மனிதர்களின் பிரச்னையைப் பேசுகிறது. ஆழ்துளைக் கிணறு என்னும் ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு எல்லாவிதங்களிலும் அலசியுள்ளது ‘அறம்’. நம் தண்ணீர் வளங்கள் எவ்வாறு சூறையாடப்படுகிறது, நீர் ஆதாரங்கள் சூறையாடப்படுகிற அவலம் எனப் பல்வேறு பிரச்னைகளைக் குறித்து இத்திரைப்படம் பேசுகிறது. விண்வெளிக்கு ராக்கெட் விடும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்திருந்தாலும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க வழிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நம் ஆட்சியாளர்கள் வெளியில் காட்டும் பிம்பம் பொய்யானது. இந்தியா வல்லரசு ஆகிவருகிறது, மருத்துவம், அறிவியல் என எல்லாத் துறைகளிலும் வளர்ந்துவிட்டோம் என்று வெளிப்பூச்சான ஒரு விஷயங்களைத்தான் சர்வதேச அரங்கில் ஆட்சியாளர்கள் காட்டி வருகின்றனர். ஆனால், அசல் இந்தியாவில் தீண்டாமையும் சுரண்டலும் பட்டினியும் ஒடுக்குமுறையும் இருக்கிறது. இதைத் தீர்க்க வேண்டிய அரசு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் எவ்வளவு மோசமாக இருக்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு கதையின் மூலம் பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார் இயக்குநர் கோபி. இத்திரைப்படத்தில் நிறைய குறியீடுகள் உள்ளன.

`அறம்’ ஆட்சியாளர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறது. இந்தமாதிரி படங்கள் நம் கூட்டுமனசாட்சியை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இத்திரைப்படம் சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. தனிமனித வலியைச் சமூக வலியாக மாற்றியுள்ளது. எனவே 'அறம்' கொண்டாடப்பட வேண்டும்” என்று முடித்தார் எவிடன்ஸ் கதிர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!