வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (05/12/2017)

கடைசி தொடர்பு:21:01 (05/12/2017)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சோலார் மின்திட்டம்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சோலார் மின் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.
5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தால் பல்கலைக் கழகத்தின் மின்தேவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் எனத் துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.

பல்கலைக் கழகம்

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா 6-ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். இது பற்றிப் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தரான பாஸ்கர், ``பல்கலைக்கழகத்தில் 46,219 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. பட்டத்தில் 14 வகையான பாதுகாப்பு அம்சங்களை வைத்துள்ளோம். இதைக் கிழிக்க முடியாது. மழையில் நனைந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

சோலார் திட்டம் பற்றி துணை வேந்தர்

பட்டமளிப்பு விழாவுக்கு வருகைதரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்க இருக்கும் சோலார் மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் 3 முதல் 5 மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒரு வருடத்துக்கு 15 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தற்போது பல்கலைக்கழகத்துக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரத்துக்காக 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. 

இந்தத் திட்டம், செயல்பாட்டுக்கு வந்தால் பல்கலைக்கழகத்துக்கான மொத்த மின்சாரத் தேவையும் பூர்த்தி செய்யப்படும். அத்துடன் எஞ்சிய 20 சதவிகித மின்சாரத்தை விற்பனை செய்வோம். அதன்மூலம், இந்தத் திட்டத்துக்கு செலவு செய்த தொகையை 7 வருடங்களில் திருப்பி எடுத்துவிட முடியும். 5 ஏக்கர் பரப்பளவில் 3,125 பேனல்களை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்’’ என்றார்.